
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை தற்பொழுது ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களைஒன்றிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சில மாணவர்கள் தவறு செய்வதால், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களின் ஒரு தேர்வு விண்ணப்பம் கூட ரத்தாகி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் அரசு பள்ளியில் மட்டும் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகினர். இந்நிலையில் இந்த முறை அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இருக்கிறது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இந்தஅறிவுறுத்தலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கியுள்ளது.
Follow Us