NEET EXAM TAMILNADU

நீட் தேர்வு என்ற கொடூர அரக்கன் தமிழக மாணவர்களை தொடர்ந்து பழிவாங்கி வருகிறது. அரியலூர் அனிதா தொடங்கி இன்றுவரை 16 மாணவர்களை காவு வாங்கியுள்ளது. நேற்று நள்ளிரவு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் மோதிலால் தற்கொலை செய்துள்ளார். இந்த வருடத்தில் மட்டும் நான்கு மாணவர்கள் பரிதாபமாக இறந்து உள்ளார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாளரைகட் பகுதியில் எலக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வரும் முருகேசன் கோமதி தம்பதியரின் மூத்த மகன் மோதிலால். இவர் குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு மூன்றாவது முறையாக எழுத இருந்த நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மோதிலால் திருச்செங்கோடு கொசவம்பாளையம் பகுதியில் உள்ள மகேந்திரா பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து அதில் 1081 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் செயல்பட்டு வரும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துவந்தார்.

Advertisment

ஏற்கனவே இரண்டு முறை மருத்துவராகும் கனவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற இயலாத நிலையில் தனது மருத்துவராகும் கனவு பலிக்காதோ என்றமன அழுத்தத்திலிருந்த மோதிலால் இந்த முறை கரோனா காரணமாக முறையான வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் இருந்த சூழலில் மத்திய அரசு நீட் தேர்வு அறிவித்ததை அடுத்து தேர்வு எழுத இருந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியதாக தெரிய வருகிறது.

தனது வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு மாணவன் மோதிலால் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் மோதிலாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் இன்று காலை மோதிலால் உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

Advertisment

NEET EXAM TAMILNADU

இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவன் மோதிலால் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து திமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் அனுப்பி வைத்தார். இன்று மாலை திருச்செங்கோட்டுக்கு வந்து மாணவன் மோதிலால் குடும்பத்தை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு நீட் எனும் கொடூரம் மாணவ சமூகத்தின் உயிரைக் குடித்து வருகிறது. இந்த நீட் தேர்வு மாணவ சமூகத்திற்கு கூடாது. இதை மத்திய அரசு இனிமேலாவது புரிந்துகொண்டு மாணவனின் உயிரை காவு வாங்கக்கூடாது என்று கூறினார்.

தொடர்ந்து நடைபெறும் நீட் கொலைகள் என்று நிற்கும்?