Advertisment

"கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

neet exam students incident chief minister mkstalin speech

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், "எல்லோருக்கும் வணக்கம்! கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்துகொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக் கொண்டேன்.

Advertisment

ஆனால், நேற்று அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், இன்றைக்கு வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் சுக்குநூறாக உடைந்துவிட்டேன். இப்போது எனக்கு இருக்கும் வேதனையைவிட, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.

Advertisment

பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவை, இழுத்து மூடும் செயல்தான் நீட் தேர்வு. ஏழை, எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்கக் கூடியது என்று தான், தி.மு.க. இந்த அநீதி தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது.அதற்கு முன்னாள் நாம் பொறுப்பில் இருந்த போதும் இந்த தேர்வை நடத்தவிடவில்லை. ஆனாலும், சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக, இந்த தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார்கள். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகள் செய்கிறார்கள்.

மருத்துவம் படிக்க வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் கனவைச் சிதைக்கக் கூடியதாக நீட் தேர்வு முறை இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு, இதில் இருந்து விலக்களிக்க இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது.

கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்திடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்கள். ஒரு சிலரைத் தவிர எல்லோருமே நீட் தேர்வை எதிர்த்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நீட் தேர்வு வேண்டாம் என்று அந்த ஆணையமும் அறிக்கை அளித்தது.

அதை அடிப்படையாக வைத்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்தேன். அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றி இருக்கிறோம். 12- ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கருத்தை, பல்வேறு மாநில அரசுகளின் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம். இந்தச் சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லை, நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.

உங்களுடைய உயிர், விலை மதிப்பு இல்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்கிறேன்.

உங்களால் மருத்துவர்கள் ஆக முடியும். உங்களால் நினைத்ததை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்ட முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும். உங்கள் உயிரை மாய்த்து, உங்கள் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.

கல்வியில் மட்டுமல்ல, தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளர வேண்டும். பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வியில் மட்டுமின்றி, தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர்களாக வளர்க்க வேண்டும். இதுதான் விதி என்று எதுவுமில்லை. விதியை மதியால் வெல்ல முடியும்.

முயற்சிதான் வெற்றியைத் தரும் என்றார் திருவள்ளுவர். அத்தகைய துணிச்சலும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, நமது மாணவ, மாணவிகள் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்காக அரசு சார்பில் 104 என்ற தொலைப்பேசி எண்ணை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மாணவ, மாணவியருக்கு ஆலோசனை சொல்வதற்காக மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உடல் நலன், உள்ள நலன் கொண்டவர்களாக நமது மாணவச் செல்வங்களை வளர்த்தெடுக்க வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய அழுத்தங்கள் தர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினர் ஆகியோர் மாணவச் செல்வங்களுக்குத்தன்னம்பிக்கை விதை விதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து, மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

chief minister incident student neet exams
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe