Skip to main content

"கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

 

neet exam students incident chief minister mkstalin speech

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், "எல்லோருக்கும் வணக்கம்! கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக் கொண்டேன்.

 

ஆனால், நேற்று அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், இன்றைக்கு வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் சுக்குநூறாக உடைந்துவிட்டேன். இப்போது எனக்கு இருக்கும் வேதனையைவிட, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.

 

பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவை, இழுத்து மூடும் செயல்தான் நீட் தேர்வு. ஏழை, எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்கக் கூடியது என்று தான், தி.மு.க. இந்த அநீதி தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதற்கு முன்னாள் நாம் பொறுப்பில் இருந்த போதும் இந்த தேர்வை நடத்தவிடவில்லை. ஆனாலும், சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக, இந்த தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார்கள். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகள் செய்கிறார்கள்.

 

மருத்துவம் படிக்க வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் கனவைச் சிதைக்கக் கூடியதாக நீட் தேர்வு முறை இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு, இதில் இருந்து விலக்களிக்க இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது.  

 

கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்திடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய  கருத்துக்களைத் தெரிவித்தார்கள். ஒரு சிலரைத் தவிர எல்லோருமே நீட் தேர்வை எதிர்த்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நீட் தேர்வு வேண்டாம் என்று அந்த ஆணையமும் அறிக்கை அளித்தது. 

 

அதை அடிப்படையாக வைத்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்தேன். அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றி இருக்கிறோம். 12- ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

இந்த கருத்தை, பல்வேறு மாநில அரசுகளின் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம். இந்தச் சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லை, நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. 

 

உங்களுடைய உயிர், விலை மதிப்பு இல்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.  அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்கிறேன்.

 

உங்களால் மருத்துவர்கள் ஆக முடியும். உங்களால் நினைத்ததை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்ட முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும். உங்கள் உயிரை மாய்த்து, உங்கள் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தாதீர்கள். 

 

கல்வியில் மட்டுமல்ல, தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளர வேண்டும். பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வியில் மட்டுமின்றி, தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர்களாக வளர்க்க வேண்டும். இதுதான் விதி என்று எதுவுமில்லை. விதியை மதியால் வெல்ல முடியும். 

 

முயற்சிதான் வெற்றியைத் தரும் என்றார் திருவள்ளுவர். அத்தகைய துணிச்சலும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, நமது மாணவ, மாணவிகள் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

 

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்காக அரசு சார்பில் 104 என்ற தொலைப்பேசி எண்ணை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மாணவ, மாணவியருக்கு ஆலோசனை சொல்வதற்காக மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உடல் நலன், உள்ள நலன் கொண்டவர்களாக நமது மாணவச் செல்வங்களை வளர்த்தெடுக்க வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய அழுத்தங்கள் தர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 

 

ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினர் ஆகியோர் மாணவச் செல்வங்களுக்குத் தன்னம்பிக்கை விதை விதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து, மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.