ADVERTISEMENT

நீட் தேர்வு: வெளிமாநில தேர்வு மையங்களுக்கு தமிழக மாணவர்களை அனுப்பி அவர்களின் மனநிலையைச் சிதைப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்!

05:58 PM Apr 25, 2018 | Anonymous (not verified)


வெளிமாநில தேர்வு மையங்களுக்கு தமிழக மாணவர்களை அனுப்பி அவர்களுடைய மனநிலையைச் சிதைப்பதா? நீட் தேர்விலிருந்து உடனே விலக்களிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமநிலையிலான வாய்ப்புகளை உருவாக்கி, அதனடிப்படையில் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிறவர்களில் இருந்து தகுதியானவர்களை அடையாளம் காண்பதே சமூகநீதியின் இலக்கணம். சமநிலையிலான வாய்ப்புகள் (Level Playing Field) இல்லாத ஏற்றத்தாழ்வானப் போட்டிகளின் களமாக இருக்கிறது மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு. மத்திய அரசின் கல்வி வாரியத்தின்கீழ் (சி.பி.எஸ்.இ.) நீட் தேர்வு நடைபெறுகிறது என்பதிலிருந்தே, மாநில அரசின் கல்வித் திட்டம் இரண்டாம்பட்சமாகக் கருதப்படுகிறது என்பதை உணரமுடியும்.

அதனால்தான், மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்து 1170 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழகத்தின் கிராமப்புற - ஒடுக்கப்பட்ட சமுதாயத்து ஏழை மாணவி அனிதாவின் மருத்துவக் கனவு நிறைவேறாமல், நீட் தேர்வு எனும் சுருக்குக் கயிற்றால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இன்னொரு அனிதா பலியாகி விடக்கூடாது என்ற அக்கறையுடன் நீட் எனும் பாரபட்சமான போட்டித்தேர்வு முறையை தி.மு.க தனது தோழமைச் சக்திகளுடன் இணைந்து, தொடர்ந்து எதிர்த்துக் களம் கண்டு வருகிறது.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பதே நமது முதன்மையான நோக்கம். மருத்துவப் படிப்பிலும், மருத்துவ சிகிச்சையிலும் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ள நிலையில், நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்படுவதால், தமிழ்நாட்டுக்கு இந்த நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் மத்திய அரசின் அலட்சியத்தால், தூங்கிக் கொண்டிருக்கின்றன.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் தங்கள் வசதிக்கு மீறி நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செலவழிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளன. போட்டித் தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான பாடத்திட்டம், கட்டமைப்பு வசதிகள், பயிற்சி ஆகியவற்றுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு காலமாவது தேவைப்படும் என கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதை கவனத்தில் கொள்ளாமல் அ.தி.மு.க. அரசு அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதுபோல, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.

எனவே, மத்திய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் எந்தப் பிடிவாதமும் காட்டாமல், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவினை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும். எதிர் கட்சிகள் ஒத்துழைப்புடன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அ.தி.மு.க. அரசு, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அரசியல் சாசனத்திற்கும், இயற்கை நீதிக்கும் புறம்பாக இளம்வயது மாணவ - மாணவியர் மீது மனரீதியான தாக்குதலை நடத்தி, சமூகநீதியை சிதைக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT