நீட் தேர்வால் பலியான மேட்டூர் மாணவன்! சோகத்தில் மூழ்கிய கிராமம்!

neet exam salem student incident

மேட்டூர் அருகே, கடைசி வாய்ப்பிலும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மருத்துவர் ஆகும் கனவு கானல் நீராகி விடுமோ என்ற மன அழுத்தத்தால், விவசாயியின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவகுமார். விவசாயி. இவருடைய மகன் தனுஷ் (வயது 19). மேட்டூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2019- ஆம் ஆண்டு பிளஸ்2 முடித்தார்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த தனுஷ், மருத்துவர் ஆவதுதான் தனது ஒரே லட்சியம் என்று சொல்லி வந்துள்ளார். இதையடுத்து, எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார்.

கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் அதில் தோல்வி அடைந்திருந்தார். அதனால் ஏமாற்றம் அடைந்த தனுஷ், மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பாக நடக்கும் நீட் தேர்வுக்காக கடுமையாக படித்து வந்தார்.

இந்த நிலையில்தான் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 13) நீட் தேர்வு நடந்தது. தனுஷூக்கு மேச்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு, அதற்கான நுழைவுச் சீட்டும் வழங்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, ''நீட் தேர்வு எழுத இதுதான் கடைசி வாய்ப்பு. இதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், மருத்துவர் ஆகும் கனவு கானல் நீராகி விடும். இதுவரை நான் கண்ட கனவெல்லாம் ஒரே நாளில் தகர்ந்து விடும்,'' என்று நண்பர்களிடம் தனுஷ் அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.

தேர்வுக்காக சனிக்கிழமை இரவு நீண்ட நேரம் தனுஷ் தனி அறையில் படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருடைய தாயார் எழுந்து சென்று தனுஷின் அறையில் பார்த்தபோது அங்கு, மகன் தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் காவல்நிலைய காவல்துறையினர், சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், மருத்துவர் ஆகும் கனவு பொய்த்துப் போய் விடுமோ என்ற விரக்தியில் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மாணவனின் மரணத்தால் கூழையூர் கிராமமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நீட் தேர்வு முதன்முதலில் நடந்த ஆண்டில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது. இதுவரை நீட் தேர்வின் மீதான அச்சத்தால் தமிழகத்தில் 15- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

incident neet exam Salem student
இதையும் படியுங்கள்
Subscribe