neet exam issues chennai high court

Advertisment

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழ் அளித்ததாகக் கைது செய்யப்பட்ட மாணவி தீக்ஷாவுக்கும், அவரது தந்தையும்,மருத்துவருமானபாலச்சந்திரனுக்கும் ஜாமீன் வழங்கசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியிடங்களை நிரப்புவதற்கான மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தீக்‌ஷா என்ற மாணவி அளித்த சான்றிதழ்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. பரிசோதித்ததில், நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த மாணவி, 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலிச் சான்றிதழ் கொடுத்தது தெரியவந்ததையடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், மாணவி தீக்க்ஷா, அவரது தந்தையும், பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். சிறையில் உள்ள தந்தையும் மகளும் ஜாமீன் கோரிய மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

Advertisment

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலச்சந்திரன் 33 நாட்களாக சிறையில் உள்ளதாகவும், மனுதாரர்களின் செயலால் மற்ற மாணவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும், மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் புலன் விசாரணை நடந்து வருகிறது. அறிக்கைக்காக காத்திருக்கிறோம். ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இருவரையும் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு விட்டதால், இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், தீக்‌ஷாவின் தந்தை பாலச்சந்திரன், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, பெரியமேடு காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.