Advertisment

எப்படி இருந்தது நீட் தேர்வு? மாணவ, மாணவிகள் சொல்வது என்ன?

neet exam experience students says

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) நடைபெற்றது.

Advertisment

இந்தியா முழுவதும் 16.14 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினர். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 28 மையங்களில் 15,067 பேர் தேர்வு எழுதினர்.

Advertisment

இந்த ஆண்டு மொத்தம் 200 வினாக்கள் கொடுக்கப்பட்டு, அவற்றில் 180 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. நீட் தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து சேலம் சக்தி கைலாஷ் கல்லூரி மையத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடம் பேசினோம்.

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த மாணவி ரக்ஷிதா, தனியார் பள்ளியில் படித்துவந்தவர். முதன்முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ''உயிரியல், தாவரவியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் ரொம்பவே எளிமையாக இருந்தன. வேதியியல் பகுதிக்கான வினாக்கள் ஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம்.

ஆனால், இயற்பியல் பகுதி வினாக்கள் மிக கடினமாக இருந்தன. இயற்பியல் சம்பந்தப்பட்ட வினாக்கள் நீள நீளமாக கேட்கப்பட்டிருந்தன. கேள்வியைப் படித்து உள்வாங்கிக் கொள்ளவே பத்து நிமிடங்கள் தேவைப்பட்டது,'' என்றார்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரத்குமார் என்ற மாணவர், அங்குள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்துவந்தவர். முதல்முறையாக நீட் தேர்வை எதிர்கொண்டுள்ள அவர் கூறுகையில், ''எங்கள் பள்ளியில் ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தினர். கரோனா ஊரடங்கின்போது ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டது, இத்தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருந்தது. இந்த தேர்வில் இயற்பியல் பகுதி மட்டும் கடினமாக இருந்தது. சில வினாக்கள் டிவிஸ்ட் செய்து கேட்டிருந்தனர்,'' என்றார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரைச் சேர்ந்த ஷாலினி, அரசுப் பள்ளியில் படித்தவர். முதன்முறையாக இத்தேர்வை எழுதியுள்ளார். அவர் கூறும்போது, ''இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சில, கணக்கீடு அடிப்படையில் இருந்ததால் கொஞ்சம் சவாலாக இருந்தது. சில வினாக்கள் குழப்பும் வகையிலும் இருந்தன. மற்ற பாடப்பகுதி வினாக்கள் ஓரளவு எளிமையாக இருந்தன.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த நீட் தேர்வு எளிமையாக இருக்கும். எங்களைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக பாடங்களைக் கொண்டு வந்தால், எதிர்காலத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் அதிகளவில் இத்தேர்வில் வெற்றி பெற வாய்ப்புள்ளது,'' என்றார்.

சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், தனியார் பள்ளி மாணவர். முதன்முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ''இயற்பியல் பகுதி வினாக்கள் மிகக்கடினமாக இருந்தன. வேதியியல் பிரிவு ஓரளவு பரவாயில்லை. உயிரியல் பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தன. இந்த வினாத்தாள் அடிப்படையில் பார்த்தால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்தேர்வு கடினமாகத்தான் இருந்திருக்கும்,'' என்றார்.

தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பது குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து நடத்தப்படாமல், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் வினாத்தாள் வடிவமைப்பு இருக்க வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள்.

students neet exam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe