இளைஞர்களின் மனதில் என்றும் நிறைந்திருக்கும் டாக்டர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவோம் என்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இளைஞர்கள் அரசியல் கட்சிகளை சாராமல் களமிறங்கி கலக்கி வருகின்றனர்.

Advertisment

இவர்களின் பிரச்சாரங்களில் மற்றவர்களை குறை சொல்லி வாக்கு சேகரிப்பது அல்ல. நான் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்பதே இவர்களில் பிரச்சாரமாக உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம். ஆனால்சொன்னதை செய்ய போராடுவோம். நாட்டின் வளர்ச்சி கிராமங்களில் இருந்துதான் தொடங்குகிறது. அதனால் கிராமங்களை சிறப்பாக்கினால் நாடு தானாக வளமாகும். வெளிப்படையான நிர்வாகம், கிராம சபையில் மக்களை கூட்டி கிராமத்தின் தேவைகளை தீர்மானமாக போட்டு தேவைகளை பூர்த்தி செய்வோம். இப்படி தான் செய்ய வேண்டும் என்பதை கலாம் நினைத்தார். அவரது கனவை நிறைவேற்றுவோம் என்கிறது இளைஞர்களின் குரல்கள்.

neduvasal local election candidate

இந்தநிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிழக்கு (இந்த ஊரை அனைவருக்கும் தெரியும்) ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பலரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதில் முன்னாள் தலைவர்கள் தாங்கள் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர். புதிய வேட்பாளர்கள் நாங்கள் வந்தால் என்ன செய்வோம் என்று வாக்கு சேகரிக்கிறார்கள்.

Advertisment

இவர்கள் மத்தியில் ஒரு வேட்பாளர் ராம்குமார்., டெல்டா விளை நிலங்களை பாலைவனமாக்கும் கெயில், மீத்தேன் திட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கத்துக்குட்டி திரைப்படத்தின்தயாரிப்பாளர். கடந்த 6 மாதங்களாக 4 தாலுகாக்களை உள்ளடக்கி நீர்நிலைகளை சீரமைத்து தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்க தன்னார்வமாக இயங்கும் கைஃபா இயக்கத்தின் தலைவர். இவரும் போட்டியிடுகிறார்.

neduvasal local election candidate

3 பக்கத்தில் வாக்குறுதிகள். ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கால அவகாசம் என்று அச்சிட்டு வீட்டுக்கு வீடு கொடுத்ததுடன் ஒரு பக்கத்தின் தன்னைப் பற்றியும் வெளியிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ராம்குமார் தான் இன்று வியாழக்கிழமை மாலை நெடுவாசல் கிராமத்தின் காவல் தெய்வமான பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சென்று வாசலில் நின்று ஒரு 20 ரூபாய் பத்திரைத்தை எடுத்து படித்தார். அந்தப் பத்திரம் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ராம்குமார் எழுதிக் கொடுப்பது. 2021 ஜனவரி 26 ந் தேதி நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கிராமத்தினரின் பெரும்பாண்மையானோர் என்னை பதவி விலக சொல்வதால் சுயநினைவோடு பதவி விலகுகிறேன். அதற்கானராஜினாமா கடிதமாக இதை ஏற்க கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதி கையெழுத்திட்ட அந்த பத்திரைத்தை பத்திரகாளியம்மன் கோயில் உண்டியலில் போட்டார்.

neduvasal local election candidate

ஏன் இப்படி என்ற நமது கேள்விக்கு.. என்னை என் கிராம மக்கள் தலைவராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில். ஒரு மாதத்தில் இருந்து எனது பணிகள் தொடங்கும். அதன் பிறகு ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட காலம் கொடுத்திருக்கிறேன். அந்த காலக்கட்டத்திற்குள் அந்த பணிகள் செய்து முடிக்கப்படும். ஒரு வருடத்திற்குள் பல பணிகளை செய்ய முடியும். அந்தப் பணிகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், உறுதியும் உள்ளது.

அப்படி நான் செய்யத் தவறினால் என்னை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் தான் சரியாக ஒரு வருடம் முடியும் போது அதாவது 2021 ஜனவரி 26 ந் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் என் பதவியை ராஜினாமா செய்வேன். அந்த ராஜினாமா கடிதம் தான் ரூ. 20 பத்திரத்தில் எழுதி எல்லாருக்கும் காவல் தெய்வமான பத்திரகாளியம்மன் கோயில் உண்டியலில் போட்டிருக்கிறேன்.

neduvasal local election candidate

நான் சொன்ன வாக்குறுதிகளை செய்துவிட்ட பிறகும் கூட சிலர் என் பதவியை பறி்க்க நினைக்கலாம். அப்படி பறிபோனால் என் கிராம மக்கள் ஒரு வருட செயல்பாடுகளைப் பார்த்து என்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இன்று போட்டியிடும் ஏராளமான இளைஞர்கள் மட்டுமின்றி போட்டியிடாத இளைஞர்களும் சொல்வதை செய்யாத உங்கள் பதவிகளை ராஜினாமா செய்வீர்களா என்று கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் முதல் முறையாக நெடுவாசல் ராம்குமார் ராஜினாமா பத்திரத்தை கோயில் உண்டியலில் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.