Nayinar Nagendran's property raided

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

Advertisment

இதனையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Nayinar Nagendran's property raided

இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரதுவீட்டில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment