பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி

Nayakaneri Scheduled Caste Woman Elected Panchayat President Canceled

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நாயக்கனேரி ஊராட்சி. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது இந்த ஊராட்சிமன்றம் பட்டியல் இனத்தைச் சார்ந்தவருக்கு(தனித் தொகுதி) ஒதுக்கித் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தங்கள் பகுதியில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தேர்தலில் போட்டியிடுவதையும் வாக்களிப்பதையும் புறக்கணித்தனர்.

இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 440 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் கிராம மக்கள் தொகையில் 66 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். 34 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். பட்டியலினத்தவர்கள் ஒருவர் கூட இந்த கிராமத்தில் இல்லை. இருப்பினும் இந்துமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது ஒட்டுமொத்த மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் தான் இடஓதுக்கீடு பின்பற்ற வேண்டும் என விதி உள்ளது. இருப்பினும் இங்கு முறையாகப் பின்பற்றப்படவில்லை எனத் தேர்தல் ஆணையத்திடமும் முதலமைச்சரின் தனிப் பிரிவிலும் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்த நிலையில் காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(பிற்படுத்தப்பட்ட வகுப்பு) என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி(பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்) என்பவர் தேர்தலில் போட்டியிட்டு, போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துமதி பதவி ஏற்பதைத் தடை செய்ய வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் என வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று(20.09.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்தது ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவராக இந்துமதி தேர்வு செய்யப்பட்டதும் ரத்து செய்யப்படுகிறது. 4 வாரங்களில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண் அல்லது பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

TIRUPPATUR
இதையும் படியுங்கள்
Subscribe