
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மர்மமான முறையில் குளத்தின் கரை உடைந்து, விளைநிலத்தில் நீர் புகுந்து பயிர்கள் நாசமாகின. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், ‘குளத்தின் கரை உடைப்பில் சந்தேகம்’ என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை அடுத்த சீகம்பட்டி ஊராட்சியில் சுமார் ஜந்தரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஆலங்குளம். இப்பகுதியில் கடந்த நாட்களில் பெய்த கனமழையில் குளம் முழு கொள்ளளவை எட்டியது. மேலும், அருகில் உள்ள குளத்திலிருந்தும் உபரி நீரானது இந்தக் குளத்திற்கு வந்தது. உபரி வெளியேற கலிங்கி பகுதி ஆக்கிரமிப்பில் இருந்ததால் ஆலங்குளம் கரையை மீறி அருகில் இருந்த விளைநிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. அதனைத்தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றுவதில் செவ்வாய்க்கிழமை இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, பின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாய்க்கால்கள் மூலம் உபரி நீர் வெளியேற அதிகாரிகள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை விடியற்காலை குளத்தின் மையப்பகுதியில் மர்ம நபர்களால் கரை உடைக்கப்பட்டு குளத்தில் இருந்த சுமார் 5 அடி உயரத்திற்கும் மேலான தேங்கிய தண்ணீர் வெளியேறிது. காட்டாற்று போல் பாய்ந்த குளத்தின் நீர் கரையின் வடபகுதியில் பயிரிட்டிருந்த விளை நிலத்தில் புகுந்து அடுத்துள்ள தச்சன் குளத்திற்கு தண்ணீர் சென்றடைந்தது. குளக்கரை உடைந்த தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி, பொறியாளர் ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் கருணாகரன், சீகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அமுததள்ளி ஆகியோர் பார்வையிட்டு கரை உடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறுவதை தடுத்துவருகின்றனர்.
இதனிடையே ஊராட்சி மன்றத் தலைவர், மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், சுமார் ஐந்தரை ஏக்கர் பாசன வசதி கொண்ட குளம். இதில் தண்ணீர் வெளியேறுவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின்னர் சமாதானமடைந்து, உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை விடியற்காலை குளத்தின் மையப்பகுதி கரையை மர்ம நபர்கள் உடைத்துள்ளரா, அல்லது இயற்கையாக உடைந்ததாக என விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.