Advertisment

தமிழக டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு!

National Women Commission action order to Tamilnadu DGP

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை நேற்று (25.12.2024) இரவு போலீசார் கைது செய்தனர். ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு, வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவத்தைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரியப் பாதுகாப்பும், மருத்துவ வசதியும் செய்து தரத் தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த கொடூரமான செயலை ஆணையம் கடுமையாகக் கண்டிக்கிறது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் உடன் நிற்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதைத் தேசிய மகளிர் ஆணையம் எடுத்துக்காட்டுகிறது.

Advertisment

தமிழ்நாடு காவல்துறை முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இந்த அலட்சியம் அவரை இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டியது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றிய தீவிர கவலையை எழுப்புகிறது. தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜய ரஹத்கர் தமிழக டிஜிபிக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும். கடுமையான தண்டனைக்கு பி.என்.எஸ், 2023இன் பிரிவு 71ஐ முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காகவும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பி.என்.எஸ் பிரிவு 72ஐ மீறியதற்காகவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ncw
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe