Advertisment

தேசிய மக்கள்தொகை பதிவேடு: திமுக கூட்டணி மக்களை குழப்பி வருகிறது! எடப்பாடி சாடல்!!

தேசிய மக்கள்தொகை பதிவேடு விவகாரத்தில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து மக்களிடம் தவறான பிரச்சாரங்களை பரப்பி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்திற்கு டிச. 27ம் தேதி காலையில் வந்தார். அன்று மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இதையடுத்து அவர் மீண்டும் விமானம் மூலம் நேற்று (டிச. 28) சென்னை கிளம்பினார்.

முன்னதாக அவர் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 National Population Record: DMK Alliance Confuse the People-eps

Advertisment

நிர்வாகத்திறனில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.

குறிப்பாக, அதிகாரிகள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்றினர். அதனால்தான் ஆளுமைத்திறன் மிக்க மாநிலம் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.

இந்தியா மு-ழுவதும் உள்ள மாநிலங்களில் 50 வகையான காரணிகளை ஆராய்ந்து, சிறப்பாக செயல்படுவதை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு 5.62 மதிப்பெண்களுடன் முதலிடம் கிடைத்துள்ளது. யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஆளும் புதுச்சேரிக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. இதில் இருந்தே எந்த சிபாரிசும் இல்லாமல் தமிழக அரசு, முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

பொங்கல் விடுமுறை நாளில், வரும் ஜனவரி 16ம் தேதி, பிரதமரின் உரையைக் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தி உள்ளது.வீட்டில் டி.வி. இல்லாத மாணவர்கள், பள்ளிக்கு வந்து உரையைக் கேட்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளோம்.

eps

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் எந்தப் பிரச்னையும், யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நடந்து முடிந்துள்ளது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்களே முடிவு செய்வார்கள். அப்படி இருக்கும்போது யாரும் பயப்பட வேண்டியத் தேவை இல்லை. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி அத்துமீறல் இருப்பதாக திமுக மட்டுமே சொல்லி வருகிறது.

ஆனால் உள்நோக்கத்தோடு சிலர் தேர்தலுக்கு எதிராக வழக்குப் போடுகிறார்கள். இதற்கு மேல்முறையீடு செய்ய வேண்டுமா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். அதிலும் ஒன்றிய, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும்தான் மக்கள் கட்சி சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர்.

1872ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. 1948ல் அதற்கென்று தனிச்சட்டம் இயற்றினார்கள். அதன்பிறகு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மூலம் மக்களுடைய பொருளாதார நிலையை அறிந்து கொள்ள முடியும். இந்த சட்டத்தில் 1955 மற்றும் 2003ம் ஆண்டுகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடைசியாக 2010ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்ட போதும் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. அப்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு என்று திருத்தம் செய்யப்பட்டது. திருத்தம் மற்றும் அமல்படுத்தும் போதெல்லாம் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அமைதியாக இருந்து விட்டு, இப்போது எதிர்க்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். 2010ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நடைமுறைப்படுத்தியதையே இப்போதும் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களிடம் செல்வாக்கு இல்லாத கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை எதிர்க்கிறார்கள் என்று கருதுகிறேன். இதற்கு போராட்டம் நடத்துவோம் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்? மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் நாடகமாடி வருகிறார் என்பதை மக்களும், சிறுபான்மையினரும், இளைஞர்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

6 மாதத்திற்கு மேல் தொடர்ந்து ஒருவர் இங்கு வசித்தால்கூட அவரும் கணக்கெடுப்பில் இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பால் இந்தியாவில் வாழும் எந்த ஒரு இந்தியருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் அரசியலுக்காக, திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டு தவறான பிரச்சாரத்தை பரப்புகிறார்கள்.

மருத்துவத்துறையில் தமிழகத்திற்கு அதிக ஒதுக்கீடு இல்லை என்பதை ஏற்க முடியாது. கடந்த ஆண்டு மட்டும் 350 மாணவர்கள் புதிதாக மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே ஆண்டில் 9 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற சாதனையும் அரசு நிகழ்த்தி இருக்கிறது. அவற்றில் 6 கல்லூரிகளுக்கான பணிகள் டெண்டர் விடப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளை மாற்றி வருகிறோம். புதிய மருத்துவக்கல்லூரிகள் மூலம் 900 மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள்.

தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோதுகூட, மின் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளது. எனவே, அவர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும். மிக முக்கியமான மின்துறை பணிகளால் மக்களும், விவசாயிகளும் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இதை உணர்ந்து அவர்கள் முடிவெடுக்க வேண்டும். நெல் கொள்முதல் விலை, ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிலும் உயர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

citizenship amendment bill edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe