/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ncw-art_2.jpg)
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள பருத்திபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அரக்கோணம் அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 1ஆம் தேதி சோளிங்கர் அடுத்துள்ள கொடைக்கல் கிராமத்தில் அமைந்துள்ள மலைக்கோவிலில் தெய்வச்செயல் (அப்போது தி.மு.க. நிர்வாகி) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை அப்பெண் முன்வைத்திருந்தார். எனவே பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்குத் தெய்வச்செயல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும்,தன்னை வற்புறுத்தி மற்றவர்களுக்கு பாலியல் ரீதியாக இரையாக்க முற்பட்டு வருகிறார் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பதற்காக அரக்கோணம் நகரக் காவல் நிலையத்திற்கு வழக்குப்பதிவு செய்ய இளம்பெண் சென்றுள்ளார். அங்கு வழக்குப்பதிவு செய்ய மறுக்கப்பட்டது. மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்திற்கு அப்பெண் சென்றுள்ளார். அங்கு நடத்தப்பட்ட விசாரணையின் பேரில், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு தெய்வச்செயல் சுமார் 20 பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்துள்ளார் என்ற மற்றொரு புகாரையும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் திமுகவின் அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயலை அப்பொறுப்பில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி நீக்கியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்களை அரசியல்வாதிகளுடன் படுக்கைக்கு கட்டாயப்படுத்தினார் என்று அவரது மனைவி குற்றம் சாட்டுகிறார்’ என்ற தலைப்பில் வெளியான ஊடக செய்தியை கொண்டு தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில் திமுக இளைஞர் அணி நிர்வாகியின் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வற்புறுத்தல் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கும்.
குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அரசியல் தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மகளிர் ஆணையத்தின் தலைவர், ‘உடனடியாக, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான தனைமையுடன் விசாரணையை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்தல், ஒரு தனிப்பட்ட விசாரணைக் குழுவை அமைத்தல், எந்தவொரு அரசியல் தலையீட்டையும் தடுப்பது மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 சட்டத்தின்படி தொடர்புடைய விதிகளின் கீழ் உடனயாகடி நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். 3 நாட்களுக்குள் எஃப்.ஐ.ஆரின் நகலோடு விரிவான அறிக்கையையும் ஆணையம் கோரியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us