Skip to main content

நிலத்தில் குழி தோண்டும் போது, நடராஜர் சிலை கிடைத்ததால் பரபரப்பு!!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் அப்துல் ஜலீஸ். இவர் தனக்கு சொந்தமான முந்திரி தோப்பில் நபார்டு திட்டத்தின் கீழ் நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக இயந்திரத்தின் மூலம் குழி தோண்டி உள்ளார். அப்போது சுமார் இரண்டு அடியில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை, மணிகள், பூஜை சாமான்கள் வைக்க பயன்படுத்தப்படும் தட்டுகள், கமண்டலம் உள்ளிட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 

natarajar statue found


பின்னர் ஆலடி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் சிலை மற்றும் அதன் உடன் இருந்த அனைத்துப் பொருட்களையும் கைப்பற்றி, தொல்லியல்துறை ஆய்வுக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சார்ந்த செய்திகள்

Next Story

தரையதிர வந்தார் நடராஜர்... பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர்.

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

நெல்லை தாமிரபரணிக் கரையோரம் உள்ள கல்லிடைக்குறிச்சியின் பக்கமுள்ள அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் ஆலயம், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பாக குலசேகரப்பாண்டியன் மன்னரால் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றனர். தங்கத்தாலும், வைரத்தாலும் இளைத்த சிலைகளை, அந்த மன்னர் அங்கே பிரதிஷ்டை செய்தாராம்.

குறிப்பாக இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை ஐம்பொன்னில் வடிவமைக்கப்பட்டது. அதன் தற்போதைய மதிப்பு 30 கோடிகளுக்கும் மேல் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த நடராஜர் 1982- ஆம் ஆண்டு ஏப்ரலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. அப்போதைய டிரஸ்டி பாபநாச முதலியார் புகார் செய்தார். இந்நிலையில் விசாரணை நடத்திய கல்லிடைக்குறிச்சிப் போலீசாரின் புலன் விசாரணையில் முன்னேற்றமின்றி இருந்தது. 

NELLAI DISTRICT KALLIDAIKURICHI NATARAJAR STATUE IG PON MANICKAVEL


அதனை தற்போது மறுபடியும் விசாரணைக்கு எடுத்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான டீம், சிலை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அடிலாய்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரிய வர ராஜ்ஜிய உறவுகள் மூலம் அதன் அதிகாரிகளான ஜேன்ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடமிருந்து நடராஜரைப் பெற்றுத் திரும்பிய பொன்மாணிக்கவேல், அதனை முறைப்படி கும்பகோணம் சிலைத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தினார். பின்னர் இன்று பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் காலை 08.00 மணியளவில் கல்லிடைக்குறிச்சி கொண்டு வந்தனர். இந்து அறநிலையத்துறை நெல்லை மாவட்ட உதவி ஆணையர் சங்கர், கோவிலின் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்ட நடராஜா தரையதிர கல்லிடைக்குறிச்சி நகர் வந்தார்.
 

ஆலய பட்டார்களின் பூஜைகள், புனஷ்கார தீப ஆராதனைக்குப் பின்பு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக வந்த நடராஜரை ஆண் பெண் பக்தர்கள் ஊரே திரண்டு வந்து ஆனந்தக் கண்ணீரோடு நடராஜரைத் தரிசித்தனர். மேள தாளம் முழங்க காலை 10.15 மணிக்கு கம்பீராக ஆலயப் பிரவேசம் செய்தார் நடராஜர். பின்னர் ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்படுவார் என்று தெரிகறது.

NELLAI DISTRICT KALLIDAIKURICHI NATARAJAR STATUE IG PON MANICKAVEL

சிலையை மீட்டு வந்த பொன்மாணிக்கவேல் நிஜ ஹரோவாகத் தெரிந்தார் நகர மக்களுக்கு. அவரைப் பாராட்டிய பொது மக்கள் அவரைத் தெருவெங்கிலும் அழைத்துச் சென்று மரியாதை செலுத்தி, செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
 

பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், நடராஜர்  சிலை வைக்கப்பட்டுள்ள கோவிலுக்கு பாதுகாப்பு கூடுதலாக அளிக்கப்படும். சிலை ஒப்படைப்பது எங்களுடைய பொறுப்பு. ஆன்மீகவாதிகள் சாமி நன்றாக கும்பிட்டதால் சிலை கிடைத்தது. மற்ற மூன்று சிலைகள் கண்டுபிடிப்பது என்னுடைய பொறுப்பு விரைவில் கண்டு பிடிப்பேன். கைதானவர்கள் குறித்து இப்போதைக்கு கூற முடியாது. கல்லிடைக்குறிச்சி கோவில் குறித்த கேள்வி மட்டும் என்னிடம் கேள்வி எழுப்புங்கள். நடராஜர் சிலை பாதுகாப்பு குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்களே முழு பொறுப்பும். நடராஜர் சிலையை பாதுகாக்க பெட்டகம் அமைக்கும் வரை கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். மீட்கப்பட்ட நடராஜர் சிலை 28 கோடி முதல் 30 கோடி வரை மதிப்புடையது. கோவில் சிலைகளை மீட்பதில் இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் ஜெயிலுக்குள் செல்வார்கள். இது வரை யாரும் இடையூறும் இல்லை. சட்டப்படி ஜெயிலுக்குள் தள்ளுவேன் என்று ஆவேசத்துடன் கூறினார் பொன்மாணிக்கவேல்.



 

Next Story

37 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லைக்கு போகும் நடராஜர் சிலை!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட நடராஜர் சிலையை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்டு இன்று கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டது.
 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக இருந்த 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை, கடந்த 1982- ஆம் ஆண்டு திருடப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு ஆண்டுகளில் வழக்கை முடித்துக் கொண்டனர். ஆனால் சிலை கண்டுபிடிக்கப்படவில்லை. 

Statue of Nataraja going to nellai after 37 years

இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பின் அவரது தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகே நடராஜர் சிலை 4 கண்டங்களைக் கடந்து ஆஸ்திரேலியாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

இதையடுத்து சிறப்பு அனுமதி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் சிலையை மீட்டு சிலை கடத்தல் பிரிவு போலீசார் சென்னை கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் வழக்குகள் ஒருங்கிணைத்து விசாரிக்கப்படும் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு இன்று நடராஜர் சிலை பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Statue of Nataraja going to nellai after 37 years


சிலை வருகையை மேலதாளம் முழங்க பூ போட்டு வரவேற்று, தீட்சிதர்கள் கொண்டு பூஜை போடப்பட்டு திறந்தனர். சிலை குறித்து பல்வேறு தகவலைக் கேட்ட நீதிபதி மீண்டும் சிலையை சிலை கடத்தல் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமிடம் ஒப்படைத்தார். இதையடுத்து நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
 

37 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட நடராஜர் சிலை நாளை முதல் பக்தர்களின் வழிபாட்டிற்கு  வைக்கப்பட உள்ளது என்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.