/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_772.jpg)
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும்அதற்குத்தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அறநிலையத்துறையின் மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை எனவும், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குவிசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது. பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கை வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், கோவில்கள் பக்தர்களுக்கானது மட்டுமே என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கை வைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)