Skip to main content

''நாங்கள் பசியால் சாவதை விட உங்கள் கையால் சாகிறோம்'' – கதறும் தஞ்சை நரிக்குறவர் குடும்பங்கள்!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

ஊரடங்கு உத்தரவால் சாலையோரங்களில் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள் மற்றும் நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. தினம் தினம் உழைத்து கிடைக்கும் சிறிதளவு பணத்தைக் கொண்டே வயிற்றை நிரப்பியவர்கள் தற்போது பசியின் கோரத்தினால் கொலை பசியின் வேதனையில் இருக்கிறார்கள்.


முகநூலில் எங்களுக்கு உதவுங்கள் இல்லை ஹீட்லர் யூதமக்களைக் கொன்றது போன்று கொன்று விடுங்கள். நாங்கள் பசியில் உயிரோடு சாகிறதை விட உங்கள் கையில் சாகிறோம் என்கிற கதறலை கேட்டவுடன் அது எந்த பகுதி என்று விசாரிக்க ஆரம்பித்தோம்.

 

 

narikuravar people thanjai

 

தஞ்சை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்குடி காலனியில் உள்ள நரிகுறவர் காலனியில் இருந்து நாங்கள் உண்ண உணவின்றித் தவித்து வருகிறோம் எங்களைக் கொன்று விடுங்கள் என்ற கதறல் சத்தம் கேட்டது.
 

 nakkheeran app



என்னாச்சு அரசாங்க உதவி எதுவும் வரவில்லையா என்று அந்த ஊரின் முக்கியஸ்தர் சுரேஷிடம் இது குறித்து பேசினோம். அவர், இந்த கரோனாவில் உலகமே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த பேரழிவில் எங்கள் இனமே அழிந்து விடும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழகத்தில் நரிக்குறவர்கள் வசிக்கும் சுமார் 67 கிராமங்கள் உள்ளது. ஆனால் அதில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களோ, உதவி என்றோ எதுவுமே எட்டிக்கூட பார்க்கவில்லை. எங்களை மனிதர்களாக கூட நினைக்கவில்லை போல,

 

narikuravar people thanjai

 

அதிலும் எங்கள் கிராமம் முக்கியமான கிராமம். இந்த ஊரில் 80 குடும்பங்கள் இருக்கிறோம். ஆனால் ரேசன் கார்டு கணக்கில் 35 குடும்பத்திற்கு மட்டும்தான் உள்ளது. மீதி குடும்பங்களுக்கு ரேசன் கார்டு கொடுங்கள் என பல முறை கேட்டும், எங்களை கணக்கில் காட்டாத குடும்பங்களாக இப்ப வரைக்கும் காட்டி வருகிறார்கள்.

எப்போதும், திருவிழாக்கள் நடந்தால் அங்கு சென்று சின்னச் சின்ன பொருட்களை விற்று எங்கள் குழந்தைகள், எங்கள் பசியைப் போக்கிக் கொண்டு இருந்தோம். ஆனால்  இந்த ஊரடங்கிற்குப் பின் வாழ்நாளில் எந்த சேமிப்பும் இல்லாத எங்களுக்கு எந்த பிழைப்பும் இல்லாமல் இனி பிழைக்கவே வாய்ப்பே இல்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கோம்.

ஊரடங்கு அமலுக்கு வந்தவுடன் பசியின் கொடுமையில் நாங்கள் கொஞ்சம், கொஞ்சமாக வாட ஆரம்பித்தோம். அப்போது எங்களை தேடி சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மாத்தூர் தாய் சமூக நல அறக்கட்டளை, ரெட்கிரஸ், குழந்தைகள் நல வாரியத்தில் இருந்து இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் காய்கறிகள் கொடுத்தனர்.

 

narikuravar people thanjai


அடுத்த எதிர்கட்சியான திமுகவின் எம்.எல்.ஏ திருவையாறு துரைசந்திரசேகரன் கட்சிகாரர்களுடன் வந்து 5 கிலோ அரிசி, காய்கறி பொருட்கள் கொடுத்தாங்க, அதுவும் 35 குடும்பத்திற்குக் கொடுத்தாங்க நாங்க அந்த அரிசியை 80 குடும்பங்களும் பகிர்ந்து எங்கள் வயிற்று பசியைத் தற்காலிகமாக நிவர்த்தி பண்ணினாங்க., ஆனா அரசாங்கத்தின் சார்பில் இன்னும் எந்த உதவியும் இல்லாமல் தவித்து வருகிறோம்.

 

narikuravar people thanjai

 


மாவட்டத்தின் எல்லையில் இருப்பதால் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். எங்களை அப்படியே உயிரோ சாவடித்து விடுவார்களபோல என்று கதற ஆரம்பித்தார். இதுவரை எந்த அரசாங்க அதிகாரிகளுக்கு வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. பசியின் கொடுமையினால் தவிக்கும் நரிக்குறவர்களின் கண்ணீர் கதறல் தமிழக அரசின் காதுகளில் கேட்டு நிவாரணம் கிடைக்க வேண்டும். கவனிக்குமா தமிழக அரசு!
 

சார்ந்த செய்திகள்

Next Story

41 உயிர்களை மீட்டவரின் வீட்டை புல்டோசரால் இடித்த அரசு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
The government demolished the house of the person who saved uttarkhand 41 lives with a bulldozer

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த ஆண்டு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க தேசிய, மாநில பேரிடர் குழுவினர் அங்கு குவிந்தனர். மேலும், சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் இங்கு கொண்டு வரப்பட்டு, சுரங்கத்தின் 47 மீட்டர் தொலைவு அளவில் துளையிட்ட போது துரதிர்ஷ்டவசமாக இயந்திரம் உடைந்தது. இதனால், தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. 

இதற்கிடையில், தொழிலாளர்கள் சீராக இருக்க, குழாய் மூலமாக உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 2 வாரத்துக்கு மேலாக நீடித்து வந்தும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர்கள் காப்பாற்றப்படுவார்களா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. 

The government demolished the house of the person who saved uttarkhand 41 lives with a bulldozer

இந்த நிலையில் தான், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்று துளையிடும் அனுபவம் வாய்ந்த 12 சுரங்கப்பணியாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு, அமெரிக்க இயந்திரம் 47 மீட்டர் துளையிட்ட நிலையில், 800 மி.மீ விட்டமுள்ள குழாய்க்குள், மீதமுள்ள 13 மீட்டர் பாதையை 21 மணி நேரத்தில் துளையிட்டு முடித்தனர். இதனைத் தொடர்ந்து, 17 நாள்கள் போராட்டத்திற்கு பின் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியை தேசிய பேரிடர் படையினர் வெற்றிகரமாக்கினர். இதன் பின்னர், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருவராக, ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்தனர். இந்த மீட்பு பணிக்கும் பேருதவியாக இருந்த எலி வளை தொழிலாளர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வர தொடங்கின. 

The government demolished the house of the person who saved uttarkhand 41 lives with a bulldozer

தங்கள் உயிரைப் பணயம் வைத்த, எலிவளை சுரங்கத் தொழிலாளர் ஒருவர் வீட்டை டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தரைமட்டாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட எலி வளை சுரங்கத் தொழிலாளர் குழுவுக்கு தலைமை தாங்கியவர் வகீல் ஹாசன். இவர் டெல்லி கஜோரி காஸ் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், டெல்லி மேம்பாட்டு ஆணையம், கஜோரி காஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டதாக கூறி பல வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த இடிப்பு நடவடிக்கை பணியில், வகீல் ஹாசனின் வீடும் இடிக்கப்பட்டது. 

The government demolished the house of the person who saved uttarkhand 41 lives with a bulldozer

இதனால், வகீல் ஹாசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாலையோரத்தில் தங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய வகீல் ஹாசன், “இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீடுகளை இடிப்பது தொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. உரிய முன்னறிவிப்பின்றி எங்கள் வீடு இடிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இது தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; மேலும் மூன்று பேர் கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Tanjore Massacre; Three more people were arrested

தஞ்சையில் நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்ட போலீசார் விசாரணை செய்து திருச்செல்வம், சின்ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதே சம்பவத்தில் மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பல்லடம் போலீசார் திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பிவைத்ததால் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.