/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_886.jpg)
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கரிகிரி கிராமத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த 65 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, அரசு முறையாக விசாரித்து 28 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கி வீடு கட்டுவதற்கு இடமும், தேர்வு செய்து கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது அவர்கள் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கட்டுமானப் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
ஆனால் சிலர் அந்த இடத்தில் வீடு கட்ட கூடாது எனத் தடைபோடுவதாக நரிக்குறவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அதனால் அவர்கள் அங்கு வீடுகட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த அந்த மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/21_132.jpg)
அப்போது வழியாக வந்த மாவட்ட ஆட்சியரிடம், “எங்களுக்கு அரசு வீடு கட்ட பட்டா வழங்கிய போதும் எங்களால் வீடு கட்ட முடியவில்லை. இடமிருந்தும் குழந்தைகளை வைத்துக்கொண்டு உறங்க முடியாமல் தத்தளித்து வருகிறோம். நாங்களும் மனுஷங்க தான் எங்களை வீடு கட்ட அனுமதி கொடுங்க...” என நரிக்குறவர்கள் முறையிட்டனர். மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மனுவைப் பெற்றுக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)