Skip to main content

வயல்வெளியில் மாணவியின் சடலம்!!! நன்னிலத்தில் பரபரப்பு

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
Nannilam - Thiruvarur District



நன்னிலம் அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் மாணவி ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மாணவி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினாரா என்கிற கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மகிழஞ்சேரி கண்ணிக்கோயில் தெருவை சேர்ந்தவர்கள் செந்தில் - மஞ்சுளா  தம்பதி. இவர்களுக்கு மோனிகா (17), சந்தோஷ் (15) ஆகிய இரண்டு பிள்ளைகள். மோனிகா அருகில் உள்ள பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதியிருந்தார்.

இந்தநிலையில் மோனிகா தினமும் இரவு தனது வீட்டில் சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள தனது பாட்டி சரோஜாவின் வீட்டுக்கு சென்று தூங்கிவிட்டு, காலையில் எழுந்து தனது வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மோனிகா தனது வீட்டுக்கு வரவில்லை என பெற்றோர்களிடம் வந்து கூற பதறிப்போன மோனிகாவின் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.

அப்போது பாட்டி சரோஜா வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள வயல்வெளியில் மோனிகா பிணமாக கிடந்தார். அவரது முழங்கை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் பிராண்டிய காயங்கள் இருந்தன. மகள் மோனிகா பிணமாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். அவர்களது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாட்டி வீட்டில் தூங்குவதற்காக சென்ற மாணவி வயல்வெளிக்கு எப்படி சென்றார். அவரது உடலில் காயங்கள் எப்படிவந்தது அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.