Advertisment

“தோழமைக் கட்சி பெண்ணிடம் இப்படியா நடப்பது?”- நாங்குநேரியில் மறைக்கப்பட்ட விவகாரம்!

நாங்குநேரி இடைத்தேர்தலில் அங்கு முகாமிட்டு சுறுசுறுப்பாகத் தேர்தல் பணியாற்றியவர்கள் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி பெற்றதும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டாடினர். அவர்களிலிருந்து விலகி நின்ற ஒருசில முகங்கள் “அதெல்லாம் தப்பில்லையா?” என்று விவாதித்து, நாங்குநேரியில் மறைக்கப்பட்ட விவகாரம் ஒன்றை விரிவாக எழுதி, கட்சித்தலைமைக்கு புகார் அனுப்பும் வேலையில் ஜரூராக இறங்கின.

Advertisment

virudhunagar

யார் மீது என்ன புகாராம்?

விருதுநகரைச் சேர்ந்த அந்த இளைஞர், ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது பிரிந்துசென்று ஆதரவுநிலை எடுத்தவர். பிறகு, ஓ.பி.எஸ். வழியில் மீண்டும் ஆளும் கட்சியில் ஐக்கியமானார். தற்போது விருதுநகரில் கட்சிப்பணி ஆற்றுவதற்கு சுறுசுறு இளைஞர் ஒருவர் தேவைப்பட, நகரப் பொறுப்புக்களில் ஒன்று அவருக்குக் கிடைக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அந்த இளைஞர் எந்தப் பொறுப்புக்கும் வரவே கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் சிலர்தான், நாங்குநேரி விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கின்றனர்.

Advertisment

இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவு தந்த கட்சிகளில் அதுவும் ஒன்று. அக்கட்சியில் ஒரு டம்மி பொறுப்பில் இருக்கிறார் அந்த அம்மணி. அவரும் நாங்குநேரியில் ஆளும்கட்சியினரோடு சேர்ந்து உழைத்தார். பிரச்சாரத்துக்கு தன் மகளையும் உடன் அழைத்து வந்தார். வாழ்க்கைத் துணை இல்லாத அந்த மகளிடம், விருதுநகர் இளைஞர் ஜொள்ளுவிட்டு, “நீ இப்ப இருக்கிறதெல்லாம் ஒரு கட்சியே இல்ல. எனக்கு பெரிய பெரிய அமைச்சர்களெல்லாம் பழக்கம். ஈஸியா உனக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தரமுடியும்.” என்று ‘அழைப்பு’ விடுத்திருக்கிறார். அவர் விலகிச் சென்ற நிலையிலும் இளைஞர் விரட்டியிருக்கிறார். அந்த மகளும் அந்த இளைஞரும் ஒரே ஜாதி என்பதால், விஷயத்தைப் பெரிதுபடுத்த விரும்பாமல், அங்கு தேர்தல் பொறுப்பைக் கவனித்துவந்த விருதுநகர் முக்கிய நிர்வாகியிடம் மகளுக்கு நடந்ததைச் சொல்லி அழுதிருக்கிறார் அவருடைய அம்மா. இந்த விவகாரம், நாங்குநேரியில் முகாமிட்டிருந்த விருதுநகர் மாவட்ட அமைச்சரும் மா.செ.வுமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சியின் விருதுநகர் நிர்வாகியிடம் பேசினோம். “ஆமா.. என் காதுக்கு விஷயம் வந்துச்சு. நான் அந்த இளைஞர்கிட்ட, ‘வந்த இடத்துல என்ன வேலை பார்த்திருக்க? இதெல்லாம் உனக்குத் தேவையா? வெளில தெரிஞ்சா நம்ம ஊர் பேரு மட்டுமில்ல; மாவட்டத்தோட பேரும் நாறிடும். தேர்தல் வேலைக்கென்று வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துகொள்வது? அதுவும், அந்தப் பெண் தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர். இந்தமாதிரி சில்லறைத்தனமான வேலை பண்ணிக்கிட்டிருந்தா.. உனக்கு கட்சியில பொறுப்பு எப்படி கிடைக்கும்?’ என்று திட்டினேன். அந்த இளைஞரோ, ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்கல. சும்மா சொல்லுறாங்க.’ என்று தவறை ஒப்புக்கொள்ள மறுத்தார். மந்திரிகிட்ட இந்த விவகாரத்தை நாங்க கொண்டுபோகல. இது பேப்பர்ல வந்துச்சுன்னா, எனக்குத்தான் டோஸ் விழும்.” என்று அவருடைய கவலையை வெளிப்படுத்தினார்.

துணிந்து அரசியலுக்கு வரும் பெண்களைத் தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் மலிந்து கிடக்கின்றனர்.

Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe