திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கலைஞரின் உடல்நிலையில் நேற்று இரவு திடீரென பின்னடைவு ஏற்பட்டதாகவும், பின்னர் சீரடைந்ததாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூகவளைதளங்களில் கலைஞரின் உடல்நிலை குறித்து அவதூறான கருத்துகள் அதிகமாக பரப்பப்பட்டது. இதனால் நேற்று இரவு முழுவதும் திமுகவினர் மத்தியில் பதட்டமான சூழல் நீடித்தது. மேலும், இதுபோல் பகிரப்பட்ட கருத்துக்களால், காவேரி மருத்துவமனை முன்பாக திமுக தொண்டர்கள் கண்ணீருடன் குவியத்தொடங்கினர். போலீசார் தடியடி நடத்தியும் கலையாத தொண்டர்கள் கலைஞரின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள மருத்துவமனை வாயிலிலே விடிய விடிய காத்திருந்தனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சியனருக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற சூழலில் அவரது உடல்நிலை குறித்து எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது. அவ்வாறு பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என எச்சரித்தார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் தீனா என்கிற தீனதயாளன் என்கிற இளைஞர்தனது முகநூல் பக்கத்திலும், வாட்ஸ்-அப்பிலும் கலைஞர் உடல்நிலை குறித்து தவறாக பதிவிட்டு வதந்தி பரப்பினார். தவறான தகவலை பரப்பாதீர்கள் என அவர் பக்கத்தில் சென்று திமுக இணைய தளத்தினர் கூறியுள்ளனர். ஆனால், அவர் தொடர்ந்து வதந்தி பரப்புவது, அநாகரிகமாக பதிவிடுவது என இருந்துள்ளார்.
இதையடுத்து குடியாத்தம் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம்,குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து, இன்று ஜீலை 30 ந்தேதி நாம் தமிழர் கட்சி பிரமுகரை கைது செய்தார்.
கலைஞர் குறித்து அவதூறு பரப்பினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் தருவது என கீழ்மட்ட திமுக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)