
புவனகிரி அருகே பின்னலூர் கிராமத்தில் 'வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர்' நிறுவனம் சார்பில் நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல் செயல்விளக்க பண்ணை துவக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு வீரநாராயண உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் கலந்துகொண்டு நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல்வெளி செயல் விளக்கப் பண்ணையைத் திறந்து வைத்துப் புதிய வேளாண் சுவரொட்டிகளை வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் அங்குக் கூடியிருந்த விவசாயிகளிடம் பேசுகையில், ''விவசாயிகள் தற்போது இயற்கை வேளாண் முறையில் பயிரிட ஆர்வம் காட்டி வருகிறார்கள் வரவேற்கத்தக்கது. நெல் வயல்களில் விவசாயிகள் கூட்டுப் பண்ணையம் அமைத்து வேளாண்மை செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். கூட்டுப்பண்ணை என்றால் நெல் வயலில் கோழி பண்ணை, குட்டையில் மீன் வளர்ப்பதாகும். இதனால் விவசாயத்திற்கு உரம், பூச்சி மருந்துகள் தேவையில்லை. பயிர்கள் நன்கு செழித்து வளரும் பயிர்களில் பூச்சி மற்றும் களை இருக்காது. கூட்டுப்பண்ணையம் அமைத்து விவசாயிகள் பயிர் செய்ய முன்வர வேண்டும் இதற்கான அனைத்து பணிகளையும் நானே முன்னின்று செய்து தருகிறேன்.
இதில் முன்னோடியாகச் செயல்படும் விவசாயிகளை ஊக்கப்படுத்தப்படும் கூட்டுப்பண்ணையம் முறையில் விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்தால் அதிக செலவு இல்லாமல் இயற்கை வேளாண் முறையில் மகசூலைப் பெறமுடியும்'' எனப் பேசினார். இதனை விவசாயிகள் கைதட்டி வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் முனைவர் ராஜ்பிரவீன், ஊரக வளர்ச்சி மையம் இயக்குனர் பாலமுருகன், தோட்டக்கலைத்துறை பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவசாயிகள் அதிக மகசூல் பெறுவது குறித்தும், ஒவ்வோரு காலங்களிலும் எப்படி பயிர் செய்வது,விளைந்த பயிர்களைச் சந்தைப்படுத்தும் முறை குறித்தும் தெளிவாக விளக்கிக் கூறினார்கள்.
இந்த விழாவில் கலந்துகொண்ட சுற்றுவட்ட விவசாயிகள் இந்த நிகழ்வு பயனுள்ளதாக இருந்தது என்றனர். விழாவில் கலந்துகொண்டு அனைவருக்கும் இயற்கை முறையில் விளைந்த பாசுமதி அரிசி தலா 1 கிலோ வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் ரங்கநாயகி நன்றி கூறினார்.
Follow Us