Skip to main content

''கோவையில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம்'' - வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

'' Nammazhvar Agricultural Research Center in Coimbatore '' - Agriculture Budget Announcements!

 

தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக நேற்று (13.08.2021) இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.

 

பொது நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண்துறை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

 

அப்போது வேளாண் பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வேளாண் - உழவர் நலத்துறை என பெயர் மாற்றப்பட வைத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்தப் பட்ஜெட்டைக் காணிக்கையாக்குகிறேன். நிச்சயமில்லாத வாழ்க்கையிலிருந்து நிம்மதியான வாழ்க்கைக்குக் கொண்டு சேர்த்தது வேளாண்மையே. விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே இந்தப் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன். விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக ஆவதால் சாகுபடி பரப்பு குறைந்துவருகிறது. மக்களாட்சிக்கு விரோதமாக தனித்து முடிவெடுத்து செயல்படுத்தும் போக்கைத் தமிழக அரசு கடைப்பிடிக்காது. 

 

கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் சாகுபடி செய்து, தமிழகத்தின் நிகர சாகுபடி பரப்பை, 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது. இருபோக சாகுபடி பரப்பை, அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். வேளாண்துறையில் இளைஞர்கள் வேலைத் தருவோராக மாறும்போதுதான் முன்னேற்றம் முயல் வேகத்தில் நடக்கும். ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் திட்டத்தில் முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். பதியன் போடுதல், கவாத்து, நுண்ணுயிர் பாசன அமைப்பு பராமரித்தல் போன்ற பயிற்சிக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானாவாரி நிலத்தொகுப்பில் பயன்பெறும் மரங்களை வளர்ப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும். பண்ணை இயந்திர வாடகை மையங்கள், மதிப்பு கூட்டு இயந்திர மையங்களை உருவாக்க நிதியுதவி வழங்கப்படும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு 146.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழப்பயிர் சாகுபடிக்கு 29.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்கள் வாங்கும் திட்டத்திற்கு 21.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

வேளாண்மைத்துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும். 2021 - 22 ஆண்டுகளில் பயிர் காப்பீடு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த 2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனைமரத்தின் பரப்பு வெகுவாக குறைந்துவருவதால் அதை அதிகரிக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும். ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகதிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 100 ரூபாயாகவும், சாதாரண ரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 75 ரூபாயாகவும் உயர்த்தப்படும். ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் 2,060 ரூபாய்க்கும், சாதாரண ரகம் 2,015 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். மழையில் நெல் மூட்டைகள் நனைவதைத் தடுக்க 52.02 கோடியில் விவசாயிகளுக்குத் தார்பாய்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மின்சாரம் தர மின்வாரியத்திற்கு 4,508.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சூரிய சக்தியால் இயங்கும் 5,000 பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும். காய்கறி, கீரை சாகுபடியைப் பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் 95 கோடியில் செயல்படுத்தப்படும்.

 

உழவர்களுக்கு வேளாண் கருவிகள் தர 15 கோடி ரூபாய் செலவில் வேளாண் உபகரணங்கள் தொகுப்பு செயல்படுத்தப்படும். வைட்டமின்-சி பெட்டகம் என்றழைக்கப்படும் நெல்லி, 200 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும். மூலிகைச் செடிகள், நெல்லிக்காய்கள் தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணை மற்றும் மூலிகை மருந்து நிறுவனத்திற்கு வழங்கப்படும். மூலிகைச் செடிகளைப் பெருக்கும் திட்டம் 2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும். வேளாண் பட்டதாரிகளைத் தொழில்முனைவோர் ஆக்குதலில் அரசு தீவிர கவனம் செலுத்தும். அடுத்த தலைமுறைக்கு கணினியைப் பற்றி தெரியும் அளவிற்கு கழனியைப் பற்றி தெரியவில்லை. கடலூர் மாவட்டம் வடலூரில் 1 கோடி ரூபாயில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். பண்ருட்டியில் பலாவிற்கு சிறப்பு மையம் அமைக்கப்படும். 1.05 ஹெக்டரில் நுண்ணீர் பாசனத்திட்டம் 982.48 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். நவீன முறையில் பூச்சிமருந்து தெளிக்க 4 ட்ரான் உள்ளிட்ட இயந்திரங்கள் வாங்க 23.29 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.  6 கோடியில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, நெல்லை, கரூர், வேலூர், கள்ளக்குறிச்சியில் ஆகிய 10 மாவட்டங்களில்  நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 10 உழவர் சந்தைகள் அமைக்கப்படும். தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து புனரமைக்க 12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் காரவள்ளி பகுதியில் மிளகு பதப்படுத்தும் மையம் ரூபாய் 50 லட்சத்தில் அமைக்கப்படும்.

 

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜுனூரில் 150 ஏக்கரில் 10 கோடி செலவில் புதிய தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்படும். நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளை விவசாயிகளுடன் இணைப்பு ஏற்படுத்த மின்னணு ஏல முறை கொண்டுவரப்படும். ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 100 ஏக்கரில்  2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். விளைபொருள்கள், மதிப்பு கூட்டு பொருட்களுக்காக சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம் ஏற்படுத்தப்படும். வேளாண்மையில் தொழில் முனைவோரை ஈர்க்க தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையங்கள் உருவாக்கப்படும். மழை நீரை சேகரித்து பயிர் உற்பத்தியைப் பெருக்க வயல்களில் 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுந்தீவன வங்கி, கால்நடை நலம், நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணைக்கு 27.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மீன் பண்ணைகள், மீன் விற்பனை அங்காடிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 7.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள அலுவலகம் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் என பெயர் மாற்றம் செய்யப்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்