Skip to main content

முன்னாள் ராணுவ வீரர் கொலை: மூளையாக செயல்பட்ட மனைவி உள்பட 8 பேர் கைது! கூலிப்படைக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்தது அம்பலம்!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Namakkal Ex Army man case police arrested eight including wife


நாமக்கல் அருகே, முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய மனைவி, ஆண் நண்பர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரைத் தீர்த்துக்கட்ட கூலிப்படை கும்பலுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ராசிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (42), முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி கவிதா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே ஊரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் செல்வராஜ் (29). இவருக்கும், கவிதாவுக்கும் தவறான தொடர்பு இருந்துவந்துள்ளது. 

 

சிவகுமார் ராணுவத்தில் இருந்தபோது வீட்டில் தனியாக இருந்த கவிதாவுக்கும், செல்வராஜுக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார். மனைவியின் தவறான நடத்தை குறித்து தெரியவந்தபோதே அவர் கண்டித்துள்ளார். ஆனாலும் கவிதா அதைப் பொருட்படுத்தாமல் செல்வராஜ் உடனான நட்பை தொடர்ந்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், மனைவியை அடிக்கடி அடித்து உதைத்துள்ளார். 

 

தான் நினைத்தபடி வாழ கணவர் தடையாக இருப்பதாகக் கருதிய கவிதா, அவரை தீர்த்துக்கட்டிவிட முடிவுசெய்தார். அவருடைய ஆண் நண்பர் செல்வராஜும் இதற்கு ஒப்புக்கொண்டார். இதற்காக சிவகுமாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை அமர்த்தியுள்ளனர். இந்நிலையில் ஜூலை 5ஆம் தேதி இரவு சிவகுமார், நல்லையம்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாக இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். குமரிபாளையம் பனங்காடு அருகே அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கூலிப்படை கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிரிழந்தார்.

 

பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மோகனூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவந்தனர். முதல்கட்ட விசாரணையில், இந்தக் கொலையின் பின்னணியில் சிவகுமாரின் மனைவி கவிதாவும், அவருடைய ஆண் நண்பர் செல்வராஜும்தான் மூளையாக செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் ஜூலை 6ஆம் தேதி கைது செய்தனர். 

 

அவர்கள் அளித்த தகவலின்பேரில் கூலிப்படையாக செயல்பட்ட சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் (49), விமல் ஆனந்த் (38), கலைமணி (36), சுரேஷ் (32), சிலம்பரசன் (35), பார்கவியின் தாயார் அம்சவள்ளி (49) ஆகிய 6 பேரையும் ஜூலை 7ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கவிதாவும், அவருடைய தாயாரும் சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், மற்றவர்கள் நாமக்கல் மாவட்ட கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

 

கடந்த 5ஆம் தேதி சிவகுமார் தனது சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாக கவிதாவிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் கிளம்பியுள்ளார். அவரிடம் அடிக்கடி செல்ஃபோனில் தொடர்புகொண்டு, அவர் சென்றுகொண்டிருக்கும் இடத்தைக் கேட்டிருக்கிறார். அவர் எந்த இடத்தில் சென்றுகொண்டிருக்கிறார் என்பது குறித்து கவிதா உடனுக்குடன் தனது ஆண் நண்பர் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். அன்று இரவு உள்ளூரில் இருந்தால் மற்றவர்களுக்கு சந்தேகம் வரும் எனக் கருதிய செல்வராஜ், ஈரோட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்தபடியே சிவகுமாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையினரை 2 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி அழைத்து வந்துள்ளார். 

 

சிவகுமாரின் இருப்பிடத்தை கேட்டுத் தெரிந்துகொண்ட கவிதா, அதை செல்வராஜுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர் கூலிப்படையினருக்குத் தகவல் அளித்துள்ளார். இந்த நெட்வொர்க்கின்படியே கூலிப்படையினர் சிவகுமாரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.