/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SIREN-ART_6.jpg)
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளி வளாகத்திலேயே சத்துணவு தயாரிக்கும் சமையலறையும் அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் சமையலறை கதவின் பூட்டு மீது மனிதக் கழிவு வீசிப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனலட்சுமி எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனிதக் கழிவு வீசியவர்களை வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் சுவரிலும் சமையலறையின் பூட்டிலும் சமூக விரோதிகள் மனித கழிவு பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற இழிச்செயல்களைச் செய்யும் அளவிற்கு சமூக விரோதிகளுக்குத் தைரியம் வருகிறது எனில், இந்த ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம் குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps-art_7.gif)
ஏற்கனவே வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த இழிச்செயல் ஏற்பட்டபோது, அதற்கான உரிய நீதியை இந்த அரசு நிலைநாட்டியிருந்தால், இன்று இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது. எங்கு மைக் கிடைத்தாலும், ‘சமூகநீதி’ என்று முழங்கிவிட்டு, அதனைத் தனது ஆட்சியில் நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திராவிடத்தின் அடிப்படைக் கோட்பாட்டையே தனது வெற்று விளம்பரத்திற்காக மட்டும் உதட்டளவில் பயன்படுத்தும் திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். அரசுப்பள்ளி வளாகத்தில் மனித மலம் பூசியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், அவர்களுக்குச் சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)