Skip to main content

காசோலை மோசடி வழக்கில் தறி பட்டறை அதிபருக்கு ஓராண்டு ஜெயில்!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

NAMAKKAL DISTRICT THIRUCHENGODE COURT JUDGEMENT BANK CHEQUE

 

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தெற்கு ரத வீதியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், சங்ககிரி அருகே உள்ள கோழிக்கால்நத்தம், திருவாண்டிப்பட்டி வடக்கு காடு பகுதியைச் சேர்ந்த தறி பட்டறை அதிபர் பாலகிருஷ்ணன் மாத சீட்டு திட்டத்தில் சேர்ந்தார். 

 

கடந்த 23.03.2016 முதல் மாதம் 1.25 லட்சம் ரூபாய் வீதம் தொடர்ந்து 6 மாதம் செலுத்தி வந்துள்ளார். பின்னர் 25 லட்சம் ரூபாய் சீட்டுப் பணத்தை எடுத்துள்ளார். ஆனால், சீட்டுத்திட்டம் முடிந்த நிலையில் அவர் 17.45 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. நிதி நிறுவனம் தரப்பில் பலமுறை கேட்டும் அவர் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகரிக்கவே, பாலகிருஷ்ணன் கடந்த 25.06.2018ல் தான் கொடுக்க வேண்டிய தொகைக்காக காசோலை எழுதிக் கொடுத்தார். ஆனால், காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. 

 

இதுகுறித்து நிதிநிறுவன கிளை மேலாளர் சசிகுமார், திருச்செங்கோடு விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகவேல், பாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்ததோடு, பாக்கித்தொகை 17.45 லட்சம் ரூபாயை செலுத்துமாறும் தீர்ப்பு அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.