ஊராட்சி மன்றத் தலைவரைப் பணியாற்ற விடாமல் முட்டுக்கட்டை; தரையில் அமர்ந்து திடீர் போராட்டம்!

namakkal district, rasipuram near area panchayat president

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் முருகேசன்,பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த ஊராட்சி மன்றச் செயலாளராக பாப்பாத்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ராமச்சந்திரன், ரயில்வே துறையில் பணியற்றுகிறார்.

இந்நிலையில் ஊராட்சி மன்றச் செயலாளர் பாப்பாத்தி, ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனை செயல்பட விடாமல் தடுப்பதாகவும், பாப்பாத்தியின் கணவரும் அவரை மிரட்டி வருவதாகவும் முருகேசன் புகார் கிளப்பினார். இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்களன்று (ஜன. 4) தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார் முருகேசன்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் அதிகாரிகள் முருகேசனை சமாதானப்படுத்தினர். ஊராட்சி மன்றச் செயலாளர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதை ஏற்றுக்கொண்ட முருகேசன் போராட்டத்தைக் கைவிட்டார்.

இதைப்பற்றி முருகேசன் கூறுகையில், ''நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஊராட்சி மன்றச் செயலாளர் பாப்பாத்தி என்னைப் பணியாற்ற விடாமல் தடுக்கிறார். அதையும் மீறி செய்தால் பாப்பாத்தியின் கணவரும் என்னை மிரட்டுகிறார். இருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இச்சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

namakkal Panchayat President rasipuram
இதையும் படியுங்கள்
Subscribe