namakkal district paramathi velur incident police investigation

பரமத்தி வேலூர் அருகே, வாலிபர் கொலை வழக்கில் தாயாரின் ஆண் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள வால்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மனைவி ராணி (55). இவர்களுடைய மகன் வெள்ளையன் என்கிற தங்கராசு (22). கணவர் சுப்ரமணி சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து தாயும், மகனும் மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில், கடந்த 6- ஆம் தேதி காலை, சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தங்கராசு கத்திக்குத்து காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் தங்கராசுவை கொலைச் செய்ததாக உள்ளூரைச் சேர்ந்த சுப்ரமணி (52) என்பவரை பரமத்தி வேலூர் அருகே மணியனூர் பகுதியில் வைத்து ஜன. 8- ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

சுப்ரமணி அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது: ராணியின் மகன் தங்கராசுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தான். கடந்த 5- ஆம் தேதி இரவு அவன், தன் தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தான். நானும் அப்போது ராணியைப் பார்ப்பதற்காக அவர் வீட்டுக்குச் சென்றேன். அவன் என்னிடமும் தகராறு செய்தான். மேலும், ராணியைச் சந்திக்கக் கூடாது என்று அடிக்கடி மிரட்டி வந்தான்.

திடீரென்று என்னுடைய செல்போனை பறித்துக்கொண்டு ஓடியதால் அவனை துரத்திக் கொண்டு ஓடினேன். சரஸ்வதி நகர் அருகே அவனை மடக்கிப் பிடித்தேன். இனியும் அவன் உயிருடன் இருந்தால் அடிக்கடி எனக்கு தொல்லை கொடுப்பான் என்பதால் என்னிடம் இருந்த கத்தியால் அவனை குத்தினேன். அவன் செத்துவிட்டான்.

அதன்பிறகு எனது செல்போனை எடுத்துக்கொண்டு நான் என் வீட்டுக்குச் சென்று விட்டேன். சிறிது நேரத்தில் ராணி, மகனைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். நான் நடந்த விவரங்களைச் சொன்னேன். தங்கராசுவின் சடலத்தை நாங்கள் இருவரும் தூக்கிச்சென்று அருகில் உள்ள ஒரு காட்டுக்குள் போட்டுவிட்டு வந்துவிட்டோம்.

மறுநாள் விடிந்தபோது தன் மகனை காணவில்லை என ராணி அக்கம்பத்தினரிடம் எதுவும் தெரியாதது போல் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கிடையே காவல்துறையினர் சடலத்தைக் கண்டுபிடித்து விசாரிக்கத் தொடங்கியதால் நாங்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டோம். ஜன. 8- ஆம் தேதி மணியனூர் வந்தபோது காவல்துறையினர் என்னை மடக்கிப் பிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலையில் சடலத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக தங்கராசுவின் தாயார் ராணியையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.