namakkal district kolli malai incident police investigation

Advertisment

கொல்லிமலையைச் சேர்ந்த மிளகு வியாபாரியை சொத்துக்காக அவருடைய மருமகன்களே நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாமக்கல் மாவட்டம்கொல்லிமலை, தின்னூர்நாடு சின்னசோள கன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் உடையாளகாளி. இவருடைய மகன் சாமிதுரை (45). கொல்லிமலையில் விளையும் மிளகை வாங்கி, நாமக்கல்லில் விற்பனை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு சாமிதுரை, கொல்லிமலையில் உள்ள தனது சொத்துகளை விற்றுவிட்டு குடும்பத்துடன் சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துக்காப்பட்டியில் குடியேறினார்.

இந்த நிலையில், அக். 6- ஆம் தேதி மாலை, தேவனூர்நாடு வனப்பகுதியில் முகம் சிதைந்த நிலையில் சாமிதுரையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வாழவந்திநாடு காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் காவலர்கள் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

காவல்துறை விசாரணையில், சாமிதுரையின் மருமகன் ராஜ்குமார், அவருடைய நண்பர் கார்த்திக் (30) ஆகியோர்தான் சாமிதுரையை கொலை செய்தார்கள் என்பது தெரிய வந்தது. அவர்களும் விசாரணையின்போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு சக்கரப்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, ராஜ்குமார் முன்னின்று 3 ஆண்டுகளுக்கு குத்தகை பேசி சாமிதுரையிடம் கொடுத்துள்ளார். ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் குத்தகை என பேசி முடிவு செய்யப்பட்டு இருந்தது. எனினும், தடவழி பிரச்சனை இருந்ததால் குத்தகை எடுத்த நிலத்திற்குள் சென்று வருவதில் சிக்கல் இருந்தது. இதனால் சாமிதுரையால் விவசாயம் செய்ய முடியவில்லை.

இதையடுத்து ராஜ்குமார் உடனடியாக தர்மலிங்கத்திடம் இருந்து தான் கொடுத்த குத்தகைத் தொகையைப் பெற்று சாமிதுரையிடம் கொடுத்துவிட்டார். ஆனாலும் குத்தகை ஒப்பந்தத்தை தராமல் சாமிதுரை இழுத்தடித்து வந்தார். இதனால் மாமனாருக்கும், மருமகனுக்கும் மோதல் இருந்து வந்தது.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, எருமைப்பட்டியில் உள்ள தன்னுடைய நிலத்தை சாமிதுரை 20 லட்சத்திற்கு விற்பனை செய்திருந்தார். நிலத்தை விற்ற பணத்தை தனது மூன்று மகள்களுக்கும் பிரித்துக் கொடுக்காமல் அவரே வைத்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், தேவானூரைச் சேர்ந்த சாமிதுரையின் மற்றொரு மருமகன் பிரசாந்த் (24) ஆகிய இருவரும் மாமனாரை தீர்த்துக் கட்ட தீர்மானித்தனர்.

இதையடுத்து, நிலம் விற்பனை செய்வது போல நடித்து மாமனாரை வெளியே எங்காவது அழைத்துச்சென்று கொலை செய்யதிட்டம் தீட்டினர். ராஜ்குமாரின் நண்பர்களான சக்கரப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (30), விளாரத்தை சேர்ந்த பழனியப்பன் (40), பூங்குளத்தை சேர்ந்த முருகேசன் (47) மற்றும் விஜயகுமார், சகாதேவன் உள்பட 7 பேரும் சேர்ந்து நிலம் ஒன்று குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதாகக் கூறி சாமிதுரையை தேவனூர்நாடு அருகே உள்ள சேட்டூர்பட்டிக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் சாமிதுரையை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர். சாமிதுரை போதையில் மயங்கிய பின்னர், அவர் மீது கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில் சாமிதுரையின் மருமகன்கள் ராஜ்குமார், பிரசாந்த், அவர்களுடைய கூட்டாளிகள் கார்த்திக், பழனியப்பன், முருகேசன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் அக்.8- ஆம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயகுமார், சகாதேவனை தேடி வருகின்றனர்.