
நாமக்கல்லில், கையூட்டு கேட்டு மிரட்டிய அதிகாரிகளை, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சினிமா பாணியில் வலை விரித்து, கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்ரீகம்பத்துக்காரர் சிறப்புப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தாளாளராக விஜயகுமார் என்பவரும், செயலாளராக அவருடைய மனைவி உமா மகேஸ்வரியும் இருந்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் இரண்டு சிறப்பு ஆசிரியர்கள், ஒரு பிஸியோதெரபிஸ்ட் ஆகிய மூவருக்கும் 2020 - 2021ஆம் ஆண்டுக்கான மானிய ஊதியமாக 5 லட்சம் ரூபாயை தமிழக அரசு கடந்த மாதம் விடுவித்துள்ளது. அரசு ஒப்புதல் அளித்த இத்தொகை, நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம்தான் சம்பந்தப்பட்ட பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்நிலையில், அரசின் மானிய ஊதியத்தொகை தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால், 2.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, இணை மறுவாழ்வு அலுவலர் சேகர் ஆகியோர் பள்ளியின் தலைவர் விஜயகுமாரிடம் கேட்டுள்ளனர். தாங்கள் கேட்டபடி கவனித்தால் மானிய ஊதியத்தை உடனடியாக விடுவிப்போம். இல்லாவிட்டால் அரசின் கஜானாவுக்கே திரும்பவும் அனுப்பிவிடுவோம் என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.
இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் லஞ்சம் கேட்ட அதிகாரிகளைக் கையும் களவுமாக பிடிக்க, சினிமா பாணியில் திட்டமிட்டு வலை விரித்தனர்.
காவல்துறையினர் வகுத்துக்கொடுத்த திட்டப்படி, விஜயகுமார் 2.50 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வசிக்கும் மறுவாழ்வு அலுவலர் சேகர் வீட்டுக்குப் புதன்கிழமை (ஏப். 28) சென்றார். சேகரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட அவர், உடனடியாக நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி வீட்டுக்குச் சென்று லஞ்ச பணத்தில் சரிபாதி பங்கை கொடுத்துள்ளார்.
இவற்றையெல்லாம் ரகசியமாக கண்காணித்தபடியே பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், ஜான்சி (வயது 53), சேகர் (வயது 48) ஆகிய இருவரையும் கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் இதற்கு முன்பு யார் யாரிடம், என்னென்ன பணிகளுக்காக கையூட்டு பெற்றனர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.