Advertisment

காதலிக்கச் சொல்லி தொல்லை; கல்லூரி மாணவி தற்கொலை!

namakkal district college student incident police investigation

Advertisment

நாமக்கல் அருகே, காதலிக்கும்படி தினமும் வாலிபர் தொல்லை கொடுத்து வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவி திடீரென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாயிரம். இவருடைய மகள் அனிதா (19). நாமக்கல் அரசுக் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். செவ்வாய்க்கிழமை (பிப். 2) இரவு அனிதா, வீட்டில் திடீரென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையறிந்த ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு (20), ஐயமுத்து (21), கோகுல்நாத் ஆகியோர் அனிதா வீட்டுக்குச் சென்றனர். மகளின் தற்கொலைக்கு வல்லரசுதான் காரணம் எனக்கூறி, அவருடைய பெற்றோரும், உறவினர்களும் மூன்று வாலிபர்களையும் முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். நிலைமை எல்லை மீறிப் போவதை அறிந்து, அவர்களுடன் வந்த கோகுல்நாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில், வல்லரசு அடிக்கடி அனிதாவிடம் சென்று, அவரை காதலிப்பதாகவும், தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார். தனக்கு படிப்பில்தான் விருப்பம் இருப்பதாகவும், காதலிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறி அனிதா காதலை ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் வல்லரசு தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துவந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அனிதா, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதற்கிடையே, வல்லரசு, ஐயமுத்து ஆகியோரை அனிதாவின் உறவினர்கள் காவல்துறையினரின் முன்னாலேயே சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், காவல்துறையினரின் வாகனத்தை சிறைபிடித்துக்கொண்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதுகுறித்து ராசிபுரம் வட்டாட்சியர் பாஸ்கர், டி.எஸ்.பி. லட்சுமணக்குமார், நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் இளங்கோ, ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோரும் தகவல் கிடைத்து, சம்பவ இடம் விரைந்தனர்.

அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படி சமாதானம் செய்தனர். மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகு, அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இதையடுத்து, வல்லரசு, ஐயமுத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அனிதாவின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள கோகுல்நாத்தைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Police investigation namakkal incident college student
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe