
நாமக்கல் அருகே, தனியார் பள்ளி ஊழியரை கொலை செய்த வழக்கில் சமையல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் தர்மராஜன் (42). இவர், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆரியூர்நாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதே பள்ளியில், தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த ரத்தினம் (47) என்பவர், அலுவலக உதவியாளராக வேலை செய்தார். அப்போது ரத்தினத்திற்கும், தர்மராஜின் மனைவிக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டது.
இதையறிந்த தர்மராஜன், அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் ரத்தினம், உறவை கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தர்மராஜன், கடந்த 2015ம் ஆண்டு ஜன. 25ம் தேதி, ரத்தினத்தை சாப்பாடு கிளறும் கரண்டியால் அடித்துக் கொலை செய்தார்.
அதன்பிறகு சடலத்தை, ஒரு சாக்குப்பையில் மூட்டையாகக் கட்டி, பூந்தோட்டம் என்ற பகுதியில் இருந்த ஒரு ராட்சத குழியில் வீசிவிட்டார். அதையடுத்து, இந்த கொலை தொடர்பாக அரியூர்நாடு கிராம நிர்வாக அலுவலரிடம் தர்மராஜன் சரணடைந்தார்.
கொல்லிமலை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி, மார்ச் 17ம் தேதி, தர்மராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.