ADVERTISEMENT

அடியோடு விரட்டப்பட்ட கரோனா! நாமக்கல், கோவை மக்கள் உற்சாகம்!

06:00 PM May 13, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

கண்களை மூடி கடவுளிடம் வேண்டிய காலம் போய், தற்போது கண்ணுக்கு தெரியாத கொடியவன் கரோனா வைரஸிடம், என்னிடம் வந்துடாதே என மனிதகுலம் வேண்டும் காலம் வந்துவிட்டது.


சீனாவிலிருந்து பறந்து வந்து, இந்தியாவில் முதல் முதலாக கேரளா மாநிலத்தில் கால் பதித்து அப்படியே நாடு முழுக்க நடை போட்டுவிட்ட இந்த வைரஸ், தமிழகத்தையும் கெட்டியாக பிடித்துக் கொண்டது. எல்லா மாவட்டத்திற்குள்ளும் புகுந்த இந்த வைரஸ், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் என சில மாவட்டங்களில் மட்டும் அதன் உக்கிரத்தை காட்டி வருகிறது.

ஆரம்பத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி அபாய சங்கு ஊதப்பட்டது கொங்கு மண்டலமான ஈரோட்டில்தான். இந்த ஈரோட்டில் வைரஸ் தொற்று வந்த வழியை கண்டுபிடித்து தொடக்கத்திலேயே அது பரவாமல் தடைகள் அமைத்து இரவு பகலாக பாடுபட்டனர் மாவட்ட உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும். இதன் பயனாக இங்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட 70 நபரில் ஒருவர் இறப்பு தவிர, மீதி 69 பேரும் நலம் பெற்று வீடு திரும்பினார்கள். இந்த வைரஸ் தொற்று ஈரோட்டில் ஒழிக்கப்பட்டு இன்றோடு 29-வது நாட்கள் ஆகிவிட்டது.


இந்த நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சை அடைந்து முழுமையாக வீடு திரும்பியுள்ளார். இந்த மாவட்டத்தில் மொத்தம் 145 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் மட்டும் இறந்துவிட மீதி 144 பேரும் வீடு திரும்பியுள்ளார்கள். இந்த வரிசையில் இதே கொங்கு மண்டலத்தில் உள்ள மற்றொரு மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில், இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் மொத்தம் 77 பேர். இதில் சிகிச்சை முடித்து பெரும்பாலனோர் வீடு திரும்பியுள்ள நிலையில், சிகிச்சையிலிருந்த மேலும் 14 பேர் முழு நலம் பெற்று இன்று அவரவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.


புதிய பாதிப்பு எதுவும் சமீபத்தில் ஏற்படவில்லை. எனவே இன்று முதல் கரோனா இல்லாத மாவட்டமாக நாமக்கல் அறிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் விசைத்தறி, லாரி தொழில், ரிக் வண்டி, கோழிபண்ணை, முட்டை உற்பத்தி ஆகிய தொழில்களில் லட்சக்கணக்கான மக்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களிடம் இந்த கரோனா வைரஸ் தாக்கம் ஊடுருவாமல் மிக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர். இவர்களோடு மருத்துவத்துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரின் உழைப்பால் கரோனா துரத்தப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT