Namakkal BJP Traders division leader viral video

Advertisment

நாமக்கல் மாவட்டத்தின் பா.ஜ.க. வர்த்தகரணி தலைவர் நாச்சிமுத்து என்பவர்ரியல் எஸ்டேட் முகவரான ராம்குமாரை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தான் தாக்கப்பட்டதைக் குறித்து ராம்குமார்காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில்காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிபுதூரைச் சேர்ந்தவர் ராம்குமார் (41). இவர், அந்த மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் முகவராக இருக்கிறார். இந்நிலையில், ராம்குமார் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பெருமாள்மலை அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 20,000 கடன் வாங்கியிருக்கிறார். கடன் வாங்கியதற்காக தன்னுடைய ஆவணங்களை அந்த நிதி நிறுவனத்திடம் ராம்குமார் ஒப்படைத்திருக்கிறார். இதனையடுத்து, ராம்குமார் அந்த தொகைக்கான வட்டியோடு ரூ. 28,000 திருப்பி செலுத்தியிருக்கிறார்.

கடனை கட்டிய பிறகு, தான் கையெழுத்திட்ட ஆவணங்களை ராம்குமார் அந்த நிதி நிறுவனத்திடம் திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் அந்த ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த நிதி நிறுவனத்திற்கு சென்ற ராம்குமார், தன்னுடைய ஆவணங்களை மீண்டும் திருப்பிக் கேட்டிருக்கிறார். அப்போதுநிதி நிறுவனத்தின் பங்குதாரரும், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. வர்த்தகரணி தலைவருமான நாச்சிமுத்து அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

Advertisment

ராம்குமாருடைய ஆவணங்களை நாச்சிமுத்து திருப்பிக் கொடுக்க மறுத்திருக்கிறார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ராம்குமாரை நாச்சிமுத்து கன்னத்தில் அறைந்து கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த ராம்குமார் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து ராம்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் தலைமறைவான பா.ஜ.க. மாவட்ட வர்த்தகரணி தலைவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறனர்.