Skip to main content

கஞ்சா வியாபாரியிடம் லஞ்ச வேட்டை! சேலம் போலீஸ் டிஎஸ்பி, பெண் ஆய்வாளர் சிக்கினர்!!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

நாமக்கல்லைச் சேர்ந்த பெண் கஞ்சா வியாபாரியிடம் லஞ்ச வேட்டையாடியதாக சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி குமார், பெண் ஆய்வாளர் சாந்தா உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

d

 

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கான போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலுவலகம் சேலம் குரங்குசாவடியில் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவின் டிஎஸ்பியாக நாமக்கல்லைச் சேர்ந்த குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.


இவர் மீது திருச்செங்கோட்டை சேர்ந்த ராணி என்கிற கஞ்சா வியாபாரி அளித்த புகாரின்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் டிஎஸ்பி குமார், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பெண் ஆய்வாளர் சாந்தா, தஞ்சாவூர் கருவூலக அலுவலக கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


அரசு ஊழியர்கள், காவல்துறையினர் யாரிடமாவது லஞ்சம் பெறுவதெனில் நேரடியாகவோ அல்லது தங்களது வாகன ஓட்டுநர் மூலமாகவோ பெறுவார்கள். ஆனால், டிஎஸ்பி குமார் லஞ்ச வேட்டையாடுவதில் நூதன உத்தியைக் கையாண்டு வந்துள்ளார்.


கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்கும் கும்பலை கைது செய்யாமல் இருக்க, அவர்களிடம் இருந்து மாதந்தோறும் லஞ்சம் வசூலித்து வந்துள்ளார் டிஎஸ்பி குமார். இதற்காக அவர், தஞ்சாவூரில் கருவூலகத்துறை ஊழியராக உள்ள தனது மைத்துனர் சிபிச்சக்கரவத்தி மூலமாக அவர் பெயரில் பிரத்யேக வங்கிக்கணக்கு ஒன்றைத் துவங்கியுள்ளார். கஞ்சா வியாபாரிகள் மாமூல் பணத்தை அந்த வங்கிக் கணக்கில் மாதந்தோறும் செலுத்தி வந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அந்த வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இது தொடர்பாக நாம் லஞ்ச ஒ-ழிப்புப்பிரிவு காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.


''புகார்தாரர் ராணியின் கணவர் பெயரும் குமார்தான். அவர் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வருகிறார். இவரை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குமார் சிறையில் அடைக்கப்பட்டதால், அவருடைய குடும்பம் கடும் நெருக்கடிக்கு ஆளானது. தனது கணவரை விடுவிக்கும்படி ராணி அடிக்கடி டிஎஸ்பி குமாரிடம் நேரில் சந்தித்து கெஞ்சினார். 


அப்போதுதான் டிஎஸ்பி குமார், எந்த காவல்துறையினரும் சொல்லக்கூடாது ஒரு அறிவுரையை ராணியிடம் கூறியிருக்கிறார். அதாவது, 'உன் புருஷன் செய்த கஞ்சா தொழிலை நீ செய்தால் நீ மட்டுமின்றி நாங்களும் நன்றாக இருப்போம்,' என்று சொல்லியுள்ளார். ஆனால் தனக்கு கஞ்சா விற்பனை செய்யத் தெரியாது என்று மறுத்துள்ளார். 


அதன்பிறகும் விடாமல் ராணியை கஞ்சா விற்கும்படி தூண்டியதுடன், எப்படியெல்லாம் விற்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்துள்ளார் டிஎஸ்பி குமார். இதனால் வேறு வழியில்லாமல் கஞ்சா விற்பனையில் இறங்கினார் ராணி. ஆந்திராவில் இருந்து வரும் கஞ்சா பொட்டலங்களை நாமக்கல், சேலம் பகுதிகளில் சிறு வியாபாரிகளுக்கு கைமாற்றி விடும் வேலையைச் செய்து வந்துள்ளார் ராணி. அதன்மூலம் கிடைத்த தொகையை வைத்துக்கொண்டு டிஎஸ்பிக்கு மாதந்தோறும் மாமூல் கொடுத்து வந்தார். 


திடீரென்று சில மாதங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை டிஎஸ்பி குமார் ராணியிடம் மாமூல் வசூலித்துள்ளார். ஆனால் தன்னால் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முடியாது என ராணி மறுத்ததால், பின்னர் மாதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என்று டிஎஸ்பி குமார் இறங்கி வந்தார். அந்தப்பணத்தை தஞ்சையில் உள்ள தனது மைத்துனரின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.


அதுமட்டுமின்றி, சேலம் மாவட்டம் வேம்படிதாளம், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி மற்றும் நான்கு மாவட்டங்களில் உள்ள கஞ்சா வியாபாரிகளிடமும் மாமூல் வேட்டையாடியாடி இருக்கிறார். 


இந்நிலையில் ஆந்திராவில் ராணிக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வியாபாரி ஒருவர் 3 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு தலைமறைவானார். அதனால் ராணிக்கு தொழில் சுத்தமாக முடங்கிப்போனது.


இதனால் ராணி தனது நான்கு குழந்தைகளையும் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆந்திராவுக்கு ஓடிவிட்டார். நீ மறுபடியும் சொந்த ஊருக்கு வந்து கஞ்சா வியாபாரம் செய்யவில்லை என்றால், உன்னுடைய அண்ணன் பழனிசாமி, தாயார் ஆகியோரை கைது செய்வோம் என மிரட்டியுள்ளார். சொன்னதோடு நிற்காமல், ராணியின் தாயார் இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி, அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். 


இதையடுத்து ஆந்திராவில் சேலம் வந்த ராணி, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் டிஎஸ்பி குமாரின் லஞ்ச வேட்டை குறித்து புகார் அளித்தார். அதன்பிறகே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.


இந்த வழக்கில் இருந்து டிஎஸ்பி குமார் தப்பிக்க வழிகளே இல்லை என்ற லஞ்ச ஒழிப்புப்பிரிவினர், அவருடைய மைத்துனரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு இருப்பது முக்கிய ஆதாரமாக கருதுகின்றனர். விரைவில் டிஎஸ்பி குமார் பணியிடைநீக்கம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது. 


இந்த வழக்கில் மற்றொரு காவல்துறை அதிகாரியான ஆய்வாளர் சாந்தா, தற்போது நெல்லையில் பணியாற்றி வருகிறார். ராணி கூறிய சம்பவம் 2017 முதல் 2019 வரை நடந்தவை. இதற்கிடையே சாந்தா, சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவர் மீது இதேபோன்ற வசூல் புகார்கள் கிளம்பியதால், அவர் நெல்லைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சாந்தா மற்றும் தஞ்சாவூரில் உள்ள சிபிச்சக்கவர்த்தி ஆகியோரிடமும் விரைவில் விரிவான விசாரணை நடத்தப்படும் எனத்தெரிகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் காவலருடன் தனிமையில் இருந்த டி.எஸ்.பி; கையும் களவுமாக பிடித்த உறவினர்கள்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Nagapattinam DSP accused of misbehaving with female constables

திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஏற்கனவே பெண் காவலர் ஒருவரும் ஆண் காவலர் ஒருவரும் தவறாக நடந்து கொண்ட  சம்பவம் பேசு பொருளாக மாறிய நிலையில்,தற்போது இதே போன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த வாரத்தில் திருச்சி ஆயுதப்படையில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் ஏட்டுடன், நாகப்பட்டினம் டவுன் டி.எஸ்.பியாக இருக்கும் பாலகிருஷ்ணன் தனிமையில் இருந்ததுள்ளார். அப்போது பெண் போலீஸின் உறவினர்கள் இருவரையும் கையும் களவுமாக வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரித்த போது, நாமக்கலைச் சேர்ந்த டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் திருச்சியில் பணியாற்றும் போது ஆயுத படையில் பணியாற்றிவரும் பெண் போலீஸுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாலகிருஷ்ணன் நாகைக்கு மாற்றப்பட்டு டவுன் டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பெண் போலீசை டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் நாகைக்கு அழைத்துச் சென்று இருவரும் ஒன்றாக தங்கியிருந்து விட்டு பின்னர் திருச்சிக்கு திரும்பியுள்ளனர்.

வழியில் அவர்களை பிந்தொடர்ந்த பெண் போலீஸின் உறவினர்கள், பாபநாசம் அருகே இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ஒரு குற்றவாளியை பிடிக்க வந்திருப்பதாக பதிலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சியில் பெண் போலீஸின் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனையறிந்த உறவினர்கள் நள்ளிரவு 1.30 மணிக்கு கையும் களவுமாக பிடிப்பதற்காக இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிடு கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டி.எஸ்.பி பாலகிருஷ்ணனை மீட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை விசாரிக்கச் சென்ற அதிகாரிகளிடம்  இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம், இதில் நீங்கள் எதற்கு தலையிடுகிறீர்கள் என்று கடுமையாக நடந்து கொண்டுள்ளார். மேலும் ஒரு உயர் அதிகாரியிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

இந்த வழக்கை கையில் எடுத்த காவல்துறை முதலில் பாபநாசம் பகுதி சாலையில் உள்ள உள்ளுர் போலீசாரின் உதவியுடன் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து இந்த சம்பவம் குறித்து உண்மைத் தன்மையை அறிய காவல்துறையினர் முயற்சி செய்து வந்த நிலையில்,  தற்போது போலிசுக்கு அதிகபட்சமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாம்.

பாலகிருஷ்ணன் திருச்சியில் பணியாற்றியபோது ஆயுதப்படை பெண் போலீஸ் ஏட்டுடன் உறவு வைத்திருந்தாரோ, அதேபோல்  தற்போது பணியாற்றி வரும் நாகையிலும் இரண்டு பெண் காவலர்களுடன் உறவு வைத்துள்ளாராம். டிஎஸ்பி பாலகிருஷ்ணன் இது தொடர்பான பல புகார்கள் வர ஆரம்பித்துள்ளதால். இவர் பல பெண்களுடன் தனிமையில் இருந்து வருவதும், இவருக்கு பல பெண்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறதாம். முதல்கட்ட விசாரணையில் நாகையில் இரு பெண் காவலர்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.  இவர் மீது உரிய நடவடிக்கை சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

ரூ. 1 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாகச் சிக்கிய டிஎஸ்பி

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

DSP arrested for taking bribe of Rs.1 lakh

 

திருச்சி மாவட்டம் பூலாங்குடியைச் சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா(45) இவர் ஆவண எழுத்தராகத் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். குமார் பதிவு செய்த வீட்டு மனை தனக்குத்தான் சொந்தமானது என்று சுந்தரம் புகார் அளித்ததின் பேரில் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு, குமார் மற்றும் எட்டு நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

இந்த குற்ற வழக்கில் பத்திர எழுத்தர் கீதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டே பத்திர எழுத்தர் கீதாவை விசாரித்த போலீசார், கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பத்திர எழுத்தர் கீதாவை மீண்டும் அழைத்து நேற்று(14.9.2023)  விசாரணை செய்துள்ளனர். 

 

அப்போது, பத்திர எழுத்தர் கீதாவை விசாரணை செய்த திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆல்பர்ட்(53) என்பவர், உன் மீது குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமலும் மேற்படி வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் தனக்குத் தனியாக ஒரு லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமாறு மிரட்டிக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பத்திர எழுத்தர் கீதா, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் படி, இன்று(15.9.23) மதியம் 3 மணியளவில் டிஎஸ்பி ஆல்பர்ட், பத்திர எழுத்தர் கீதாவிடம் இருந்து ஒரு லட்சம் லஞ்ச பணத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், டிஎஸ்பி ஆல்பர்ட்டை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பின் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.