Skip to main content

நல்லதங்காள் தடுப்பணை..! கிடப்பில் போட்ட அதிமுக அரசு!! போராட்டத்துக்கு தயாராகும் எம்.எல்.ஏ.!!!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகளில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிதான் விவசாயம் நிறைந்த தொகுதியாகும். இத்தொகுதியில் உள்ள தொப்பம்பட்டி ஒன்றியத்தில் இருக்கும் கொத்தையம், நல்லதங்காள் ஓடை தடுப்பணை கட்டினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணியிடம் அப்பகுதி விவசாயிகளும், மக்களும் கோரிக்கை மனு கொடுத்தனர். 

 

nallathangaal dam issue

 

 

அதன் அடிப்படையில் கடந்த 2010ல் முதல்வராக இருந்த கலைஞரிடம், தொகுதி மக்களுக்காக நல்லதங்காள் அணைக்கட்டு கட்டி கொடுக்க வேண்டும் என சக்கரபாணியும் வலியுறுத்தியதின் பேரில்தான் நிதி நிலை அறிக்கையில் நல்லதங்காள் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி அணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி, பணிகளையும் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கொத்தையம், தேவத்தூர், கொடுவார்பட்டி, வாகரை, பொருளுர், கள்ளிமந்தையம், கோடாங்கிபட்டி, கப்பல்பட்டி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமப்பகுதியில் விவசாயநிலங்களும் பயனடையும். குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கனவு கண்டு வந்தது, தற்போது வரை பகல் கனவாகவே இருந்து வருகிறதே தவிர அணையின் பணிகள் முடிந்த பாடில்லை.  

இதுகுறித்து கொத்தையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவர் கூறுகையில், "கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த அணையின் பணிகளை முடித்துக் கொடுக்க அரசு ஆர்வம் காட்டவில்லை. அதிலும் 120 ஏக்கரில் தான் முதலில் குளம் இருந்தது. அது போதாது என்பதற்காக எங்க எம்.எல்.ஏ. சக்கரபாணியின் தொடர் முயற்சியால் நல்லதங்காள் ஓடையை சுற்றியுள்ள விவசாயிகளிடம் 127 ஏக்கர் நிலங்களை பெற்று அதற்கு பணமும் வாங்கி கொடுத்தார். 

 

nallathangaal dam issue

 

அதில் 13 ஏக்கர் நிலத்தைக் கொடுத்த விவசாயி வரதராஜன், கூடுதல் பணம் கொடுத்தால்தான் நிலத்தை தருவேன் என முறையிட்டார். அந்த கூடுதல் பணத்தைக் கூட எங்க எம்.எல்.ஏ. சக்கரபாணி தான் கொடுத்தார். அதன்மூலம் 247 ஏக்கரில் 17 கோடியே 50 லட்சம் செலவில் அணைக் கட்டப்பட்டு வந்தாலும் கூட பணிகள் இன்னும் ஆமை வேகத்தில் தான் நடந்து வருகிறது. அணையை சுற்றி மண் மூலம் தடுப்புசுவர் எடுத்தும் கூட அதில் கல் பதிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். அதன்மூலம் சமீபத்தில் பெய்த மழைக்கே அங்கங்கே தடுப்புச் சுவரில் மண்அரிப்பு ஏற்பட்டு வருகிறது. அதுபோல் விவசாயத்திற்காக பொருளுர் வரை தண்ணீர் போகக்கூடிய வரத்து வாய்க்கால் மற்றும் குருவப்பநாயக்கன்வலசு வரை போகக்கூடிய தண்ணீர் வரத்து வாய்க்கால் பணிகளையும் முழுமையாக முடிக்காமல் போட்டுவிட்டனர். அதனால் வரக்கூடிய மழைகாலத்திற்குள் கிடப்பில் போடப்பட்ட பணிகளை உடனடியாக முடித்து அணையில் தண்ணீர் தேக்கி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் . 

இது சம்மந்தமாக கப்பல்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரனிடம் கேட்டபோது, "எங்க பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை எம்.எல்.ஏ. சக்கரபாணி நிறைவேற்றி கொடுத்தும் கூட கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் தான் இருந்து வருகிறோம். இதனால் நிலத்தடி நீரும் கேணிகளுக்கு தண்ணீர் வரத்தும் இல்லாததால் மக்காச்சோளம், பருத்தி, முருங்கை, கண்வள்ளிகிழங்கு போன்ற விவசாயமும் சரிவர செய்ய முடியவில்லை. அதைவிட கொடுமை என்னவென்றால், குடிதண்ணீர் கூட பணம் கொடுத்து வாங்கித்தான் குடித்து வருகிறோம். அதனால் அரைகுறையாக உள்ள அணையின் பணிகளை சீக்கிரம் முடித்துக் கொடுத்தார்கள் என்றால் வரக்கூடிய மழைமூலம் அணையில் தண்ணீரும் பெருகும் அதன்மூலம் வருடத்திற்கு இரண்டு போகம் விவசாயமும் செய்ய முடியும் மக்களுக்கும் குடிதண்ணீர் நிரந்தரமாக கிடைக்கும். அதற்காகத்தான் எங்க எம்.எல்.ஏ. தொடர்ந்துபோராடி வருகிறார் அப்படியிருந்தும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்ற ஒரே காரணத்திற்காக, அரசு இந்த பணிகளை முடிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது" என்று கூறினார். 

 

nallathangaal dam issue

 

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கொறடா சக்கரபாணி இதுகுறித்து கூறுகையில், "கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடனே அணையின் பணிகளை கிடப்பில் போட்டுவிட்டனர். அப்படி இருந்தும் கடந்த 2015ல் விவசாயிகளையும், மக்களையும் திரட்டி கொத்தையத்தில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினேன். அதன்பின் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதை தொடர்ந்து உண்ணாவிரதம், பஸ் மறியல் பல போராட்டங்களை மக்களை திரட்டி செய்தேன். அப்படியிருந்தும் பணிகளை முழுமையாக முடிக்க இந்த அரசு ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறது. அணையை சுற்றி போடப்பட்ட கரையில் கல் பதிக்காமல் போட்டுவிட்டனர். இதனால் வரக்கூடிய மழைக்காலங்களில் கரை உடைந்து தண்ணீர் வெளியே சென்றால், அருகே உள்ள விவசாய நிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் உடனடியாக 
கரைகளிலும், வாய்க்கால்களிலும் கல் பதிக்க வலியுறுத்தி வருகிறேன். 

அதுபோல் அணையின் உள்பகுதியில் உள்ள மண் திட்டுக்களையும், கருவேல மரங்களையும் அகற்றி சீர் செய்தால்தான் அணையில் தண்ணீர் தேங்கும். அந்த பணிகளையும் செய்யாமல் தொடர்ந்து கிடப்பில் போட்டு வருகிறார்கள். அதையெல்லாம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் அப்படிசெய்தால் தான் அணையை சுற்றியுள்ள ஏழுஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களும் பயன்பெறும். அதோடு ஐம்பது கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நிலத்தடி நீர் மூலமாகவே குடிநீர் கிடைக்கும். தற்போது நிலத்தடி நீரும் உப்புத்தண்ணீராக இருந்து வருகிறது. காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டனர். அதனால் தான் இத்திட்டத்தை உடனே முடித்துக் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து போராடி கொண்டு வருகிறேன். தற்போது கூட கலெக்டரிடம் மனு கொடுத்து இருக்கிறேன். அணை கட்டும் பணிகளை உடனடியாக முடித்து கொடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தொகுதியில் உள்ள மக்களையும், விவசாயிகளையும் திரட்டி ஒரு மாபெரும் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறேன்" என்றார் . 

இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, "எம்.எல்.ஏ. சக்கரபாணி கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில், அணையின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு இருக்கிறேன். அது வந்த பின்புதான் மேல் நடவடிக்கை என்னவென்று சொல்லமுடியும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.