இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லக்கண்ணுஅய்யாவின்நூற்றாண்டு விழாவையொட்டி பழ.நெடுமாறன் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இங்கே நம்முடைய அய்யா பழ.நெடுமாறன் குறிப்பிட்டுச் சொன்னதை போல் வாழ்த்துவதற்காக நாங்கள் வந்திடவில்லை வாழ்த்து பெறுவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். அந்த அளவிற்கு நூற்றாண்டு விழா நாயகராக இருக்கக்கூடிய அய்யா நல்லகண்ணு அவர்களுடைய புகழை, சிறப்பை,தியாகத்தை இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறோம். சமத்துவ சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய பணியில் வெல்வதற்காக வாழ்த்துங்கள் எனக் கேட்க வந்திருக்கிறோம். உங்கள் வாழ்த்தை விட பெரிய ஊக்கம் எங்களுக்கு கிடைத்து விடப் போவதில்லை.
தந்தை பெரியாருக்கும் கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணு அய்யாவிற்கு கிடைத்திருக்கிறது. 100 வயதை கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ் சமுதாயத்திற்காக இன்னும் உழைக்க தயாராக இருக்கும் உள்ள உறுதியோடு அமர்ந்திருக்கக் கூடிய நல்லகண்ணு அய்யாவுக்கு கம்பீரமான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பீரமான வணக்கம் மட்டுமல்ல கம்பீரமான செவ்வணக்கத்தையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு நெடுமாறன் அவர்கள் இந்த நூற்றாண்டு விழாவை எடுத்து இருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி என பல்வேறு தலைவர்களுடன் நெருங்கி பழகியவர் நெடுமாறன் அவர்கள். திராவிட இயக்கத்திற்கு பல தீரர்களை தந்த அண்ணாமலைபல்கலைக்கழகத்தின் பட்டறையில் உருவானவர் ஐயா நெடுமாறன். உலக தமிழர் பேரவையின் நிறுவன தலைவராக இருந்து இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடி வரக்கூடியவர் நெடுமாறன்.பொதுவுடமை இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் தேசிய இயக்கம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறோம்.
இந்த நேரத்தில் பாரதிதாசனின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்குவருகிறது 'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு'. எல்லோரையும் ஒன்றாக்கி இருப்பது தோழர் நல்லகண்ணு அவர்களுடைய தியாகம். தகைசால் தமிழர் விருதை அவருக்கு வழங்கியது எனக்கு கிடைத்த பெருமை'' என்றார்.