
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, முருகன் ஆகியோர் உறவினர்களுடன் வீடியோ கால் பேச அனுமதிக்க வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மா சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தினமும் 10 நிமிடம் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறையிடம் அனுமதி கோரிய நிலையில், அது மறுக்கப்பட்டதாகவும் எனவே சிறைத்துறையின் உத்தரவை ரத்துசெய்து இருவரும் வீடியோ காலில் உறவினர்களுடன் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்த மனு மீதான விசாரணையில், மத்திய அரசுத் தரப்பில், வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச சிறைக்கைதிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என கூறப்பட்டது. தமிழ்நாடுஅரசுத் தரப்பில், இந்தியாவிற்குள் இருப்பவர்களுடன் 10 நாட்களுக்கு ஒருமுறை பேச சிறைக்கைதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், நளினியின் தாயார் வைத்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (17.06.2021) தீர்ப்பளித்த நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, நளினியும் முருகனும் தினமும் 10 நிமிடம் அவர்களது உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசுவதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
Follow Us