NALINI AND MURUGAN WHATS APP CALL CHENNAI HIGH COURT GOVERNMENT

Advertisment

தாயார் மற்றும் சகோதரியுடன் வாட்ஸ்- அப் காணொலி அழைப்பின் மூலம் பேச முருகனுக்கும் நளினிக்கும் அனுமதி அளிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்- அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும். மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே, காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் முருகன் பார்ப்பதற்கு, தமிழக அரசு அனுமதிக்காததைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவிற்குப் பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள், வாட்ஸ்- அப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்னை உள்ளது என்று கேள்வி எழுப்பினர். பிறகு, மனுவுக்கு நாளை மறுதினம் பதிலளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.