எம்.கே.பி. நகரில் வசித்து வந்த ஒரு 16 வயது இளம் பெண்ணுக்கும் சென்னை புழல் சிறையில்சூப்பிரண்டண்ட் செந்தில்குமாரிடம் கண்மேனாக பணிபுரிந்து வந்த போலீஸ் மகேஷுக்கும் ஃபேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறி திருணம் செய்துகொள்வதாக கூறி அப்பெண்ணுடன் மகேஷ் தனிமையில் இருந்துள்ளார். இதனால், அப்பெண் கருவுற்று அதனை மகேஷ் பேச்சை நம்பி கலைத்துள்ளார். அதேபோல், மீண்டும் அடுத்த முறையும் கருவை கலைக்கச் சொல்லி மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “நான் உன்னை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். உன்னைப் போல் பல பேரை இதே போல்தான் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் நான் அத்தனை நபர்களை திருமணம் செய்துகொள்ள முடியுமா?” என போலீஸ் பாணியில் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதற்கு அந்த 16 வயது சிறுமி ஏமாற்றப்பட்டதை விசாரிக்காமல் எம்.கே.பி. நகர் இன்ஸ்பெக்டர் உமன் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். அதன் பிறகு மனமுடைந்துபோன அந்த பெண், தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
அதன்பிறகு மீண்டும் தன் மகளுக்கு நீதி வேண்டும் என 15 நாள் போராட்டத்திற்கு பிறகு இன்ஸ்பெக்டர் ரமேஷ், அப்பெண்ணின் தாயை அழைத்து ‘அந்த பெண் இறப்புக்கு ரூ. 2 லட்சம் பணம் வாங்கி கொடுக்கிறேன். இதை இப்படியே விட்டுவிடுங்க. உங்க பொழப்பை பாருங்கள்’ என்று சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். “அதே பணத்தை நான் கொடுக்கிறேன் நீங்கள் அந்த பையனை இங்கே கொளுத்திக்கச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்.
அதன்பிறகுநீதி மன்றத்தில் வழக்கு கொடுத்து பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மூலமாக குற்றபிரிவு 6 போக்ஸோ ஆக்ட், 305 தற்கொலைக்கு தூண்டுதல், 366 (ஏ) உடல் ரீதியிலான துன்புறுத்தல், 376 வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சைதாப்பேட்டை சப்ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் இந்த விவகாரத்திற்கு தொடர்புடைய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. புழல் சிறை சூப்பிரண்டென்ட் ஆகியோரின் மீது சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. மேல் விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளதால் மேலும் அதிகாரிகள் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இது குறித்து இறந்து போன பெண்ணின் தாய் கூறுகையில், “இந்த தீர்ப்பு எனக்கு மன ஆறுதலைதான் கொடுத்துள்ளதே தவிர, மனநிறைவாக இல்லை. இவர்கள் மீண்டும் வெளியில் வந்து அதே காரியத்தை செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சியம். எனவே இவர்களுக்கு தூக்கு தண்டனைதான் கொடுக்க வேண்டும். எனக்கு கணவர் இல்லை தனியாக நீதிக்காக போராட வேண்டும் என்று சொன்னபோது வழக்கறிஞர் பாலா, இதனால் வரையிலும் ஒரு பைசா கூட வாங்காமல் வழக்கை முடித்து தந்துள்ளார். அவருக்கு நன்றி. அதே போல் இந்த விசயத்தை முதலில் அம்பலப்படுத்திய நக்கீரனுக்கு நன்றி. இருவரும் இல்லை என்றால் எனக்கு இன்று நீதி கிடைத்திருக்காது” என்றார்.
நக்கீரன் 2021, பிப்ரவரி 10-12 தேதி இதழில் ‘உயிருக்கு தீ வைத்த ஃபேஸ்புக் காதல்’ எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.