Nakkheeran news echo Guards changed to the armed forces

புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களிலும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் காவல் நிலைய பகுதியிலும் இரவு நேரங்களில் ஒரு கும்பல், மணல் வண்டிகள், சட்ட விரோத மது விற்பனையாகும் இடங்கள், சூதாட்ட கிளப்புகளைப் பிடித்து தங்களைத்தனிப்படை போலீசார் என்று சொல்லி மெகா வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டை, தஞ்சாவூர் காவல் நிலையங்களில் உள்ள ஒரு சிலரைத் தவிர மற்ற மொத்த போலீசாரும் முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

Advertisment

இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிற்றம்பலம் காவல் நிலைய எல்லையில் உள்ள ஏனாதிகரம்பை கிராமத்தில் ஒரு தோட்டத்தில், புதுக்கோட்டை - தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு புல்லட், ஒரு மொபட்டில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தோட்டத்தில்அமைக்கப்பட்டிருந்த கடப்பாக்கல் இருக்கையை உடைத்து சூதாட்டத்தில் இருந்தவர்களை மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.1.75 லட்சம் வரை பணத்தைப் பறித்துக் கொண்டு, நாங்க பேராவூரணி போலீஸ், கிரைம் போலீஸ் டீம் என்றெல்லாம் சொல்லிவிட்டு பணத்தோடு புறப்பட்ட நேரத்தில் ரூ. 25 ஆயிரத்தை பறிகொடுத்தவர், சார் நீங்க பணத்தை தரலைன்னா உங்க பேரை எழுதி வச்சுட்டு தூக்குல தொங்கிருவேன் என்று மிரட்டி ரூ. 20 ஆயிரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

Advertisment

போலீசார் என்ற பெயரில் சூதாட்டக்காரர்களிடம் பணத்தை சுருட்டி அள்ளிச் செல்லும் கும்பல் யார் என்ற கேள்வியோடு வெள்ளிக்கிழமை நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டதுடன் தஞ்சை மாவட்ட காவல் நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற நிலையில், மாவட்ட உயர் அதிகாரிகளின் விசாரணையை அடுத்து சனிக்கிழமை பேராவூரணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் பட்டுக்கோட்டை சப்டிவிசன் கிரைம் டீமில் உள்ள சுரந்திரன், ராகவன், சிம்ரான் ஆகிய 3 காவலர்கள் உள்பட 4 பேரையும் பட்டுக்கோட்டை டிஎஸ்பியிடம் விளக்க கடிதம் கொடுத்துவிட்டு தஞ்சை மாவட்ட ஆயுதப்படையில் கையெழுத்திட உத்தரவிட்டனர். இதையடுத்து சனிக்கிழமை மதியம் பட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் 4 பேரும் தனித்தனியாக விளக்க கடிதம் கொடுத்துள்ளனர்.

 Nakkheeran news echo Guards changed to the armed forces

நக்கீரன் இணைய செய்தியால் சட்ட விரோத கும்பல்களிடம் பணம் பறித்த ஒரு கும்பல் பிடிபட்டுள்ளது. இது குறித்து சில போலீசார் கூறும்போது, “பேராவூரணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராம்குமார் புதிதாகப் பொறுப்பேற்றவர். காவல் நிலையத்தில் நேர்மையாகச் செயல்பட்டார். ஆனால் கிரைம் டீம்க்கு கூடுதலாகப் பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு, கிரைம் டீமில் உள்ள சிலர் பேச்சைக் கேட்டு இன்று இப்படி சிக்கி இருக்கிறார். அதாவது, கிரைம் டீம் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று பிடிக்கும் போது பணம் அதிகமாக இருக்கும். அதனைக் கைப்பற்றும்போது, சில காவலர்கள் இவ்வளவு பணத்தையும் நாம காவல் நிலையத்தில் ஏன் ஒப்படைக்கணும் உங்களுக்கு முன்னால இருந்த சில அதிகாரிகளிடமும் வேலை செய்திருக்கிறோம்.

அந்த அதிகாரிகள் வாரத்தில் ஏதாவது ஒன்று, இரண்டு கேஸ் மட்டும் போட்டுட்டு அதிலும் கைப்பற்றும் பணத்தை முழுமையாக கொடுக்காமல் 5, 10 ஆயிரங்களை மட்டும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓடிட்டாங்கன்னு ஒரு கேஸ் போடச் சொல்லிட்டு பாக்கி உள்ள மொத்த பணத்தையும் கொண்டு போயிடுவாங்க. அதில் எங்களுக்கும் பங்கு வரும். கணக்கிற்காக வாரத்தில் ஒன்று இரண்டு கேஸ் தவிர மற்ற எல்லாமே பங்குதான். இதை யாரும் புகார் சொல்ல மாட்டாங்க. அதனால நாமலும் அதையே செய்யலாம் என்று புது எஸ்.ஐக்கு பணத்தாசையை காட்டி மயக்கிட்டாங்க. இப்ப எல்லாருமா சிக்கிட்டாங்க. மேலும் உயர் அதிகாரிகளின் விசாரணைமுடிவில், மேல் நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்” என்றனர்.