
சிதம்பரம் கஞ்சித் தொட்டி முனையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் நெடுந்தூரிலிருந்து பேருந்தில் பயணம் செய்து கஞ்சித் தொட்டி முனையில் இறங்கும் பயணிகளுக்கு வசதியாக கழிவறை கட்டப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளை கடந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறையின் மேல் தளம் சேதம் அடைந்து மழை நீர் ஒழுகி மேல் தளத்தில் இருந்த கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து கழிவறை கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் கழிவறையை பயன்படுத்த முடியாமல் பூட்டி சீல் வைத்தது. அதே நேரத்தில் கழிவறையின் கீழ் தளத்தில் இயங்கிய வணிக கடைகள் தொடர்ந்து இயங்கி வந்தது. இதில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சென்று வந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணையத்தில் பிப்ரவரி 4ம் தேதி சிதிலமடைந்து சீல் வைக்கப்பட்ட கழிவறை என படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அதை வரவேற்று பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இது குறித்து நகராட்சி அலுவலர்கள் உடனடியாக அந்த கட்டிடத்தில் இருந்த வணிக கடைகளை காலி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் மே 24-ஆம் தேதி இந்த கழிவறையை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள், பயணிகள் வரவேற்று விரைவில் அதே இடத்தில் புதிய கழிவறையை நவீன முறையில் தரம் வாய்ந்ததாகக் கட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.