Skip to main content

"தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் உதவுபவனே உண்மையாக உயிர் வாழ்பவன்" - நக்கீரன் ஆசிரியர்  

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Nakkheeran Editor speech in cuddalore

 

பொன்விழா ஆண்டு காணும் விருத்தாசலம் லயன் சங்கம், ஜெயின் ஜுவல்லரி மற்றும் சென்னை முக்தி நிறுவனம் இணைந்து நடத்திய இலவச செயற்கைக் கால் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் லயன் சங்க தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநர் சிவக்குமார், முக்தி நிறுவன சேர்மன் மீனா தாதா, பாண்டி - கடலூர் மாநில தலைமை அன்னை டாரியா ஜோஸ்பின் செல்வராணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 

லயன் சங்க மாநாட்டு நடைமுறைகள் மாவட்ட தலைவரும், ஜெயின் ஜுவல்லரி உரிமையாளருமான ம.அகர்சந்த் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, “விருத்தாசலம் லயன் சங்கம் கடந்த 24 வருடமாக காலை இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்துவதை தொடர்ந்து செய்து வருகிறது. இதுவரை 2500 பேருக்கு காலிப்பர் கால்களும், 4500 பேருக்கு லிம்ப் கால்களும் வழங்கியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகள் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. அது வருத்தமாக இருந்தது. தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறோம். தொடர்ந்து இது போன்ற நிகழ்வை நடத்துவோம்” என்றார்.

 

லயன் சங்க பன்னாட்டு இயக்குநர் மதனகோபால், நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய நக்கீரன் ஆசிரியர், “ஒத்த தறவோன் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்" என்ற குறள் 'ஒப்புரவை அறிந்து, போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர் வாழ்கின்றவன் ஆவான். மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்' என கூறுகிறது. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று மட்டும் வாழ்பவர்கள் செத்த பிணத்திற்கு சமமானவர்கள். அவ்வாறில்லாமல் தம்மை சுற்றியுள்ள மனிதர்களுக்கும் கல்வி பெற முடியாதவர்களுக்கு கல்வியை கொடுத்து, உணவு தேவைப்படுவோர்க்கு உணவு கொடுத்து, கை இல்லாதவர்க்கு கை கொடுத்து, காலில்லாதவருக்கு கால் கொடுத்து, கண்ணில்லாதவர்க்கு கண் கொடுத்து வாழ்கின்றவர்கள் தான் உண்மையிலேயே உயிர் வாழ்கின்றவர்கள். அத்தகைய தொண்டுள்ளம் கொண்டவர்கள் இந்த லயன் சங்கத்தில் இருப்பவர்கள். 

 

அடுத்து  "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு" எனும் குறள் 'ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது'. என்கிறது. அதாவது ஒரு வீட்டுக்குள் உள்ள நீச்சல் குளத்தால் அந்த குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பயன் இருக்காது. ஆனால் ஊரணி எனப்படும் ஏரி, குளம் போன்ற ஊருக்கு பொதுவாக உள்ள நீர்நிலையால் ஊரில் உள்ள அனைவரும் பயன்பெறலாம். அதுதான் ஊரணி. அந்த ஊரணியைப் போன்றவர் அரிமா சங்க நிர்வாகி அகர்சந்த். உதவுவதற்கு மனசு வேண்டும்; ஆனால் பலர் உதவுவதே வாழ்க்கையாக கொண்டுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உள்ளவர்கள்; குறிப்பாக இந்த அரிமா சங்கத்தில் உள்ளவர்கள் அத்தகையவர்கள். அவர்களில் முதன்மையானவர் அகர்சந்த். இது போன்ற தொண்டு உள்ளம் உள்ளவர்களால் தான் தொண்டு செய்யும் அமைப்புகளால் தான் இல்லாமை இல்லாமலும்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவும்; வாழ முடியாத நிலையிலும் வாழ நினைப்பவர்களுக்கு  வாழ்க்கையையும் தன்னம்பிக்கையும் அளிக்கிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்