Advertisment

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Nakkheeran condemn to Annamalai

Advertisment

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப்பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும்.

Advertisment

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்

Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe