
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் ஆசிரியர் ராஜகுரு பயிற்சி அளித்துள்ளார். இதனால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களில் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் சீனப்பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்தனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் திருப்புல்லாணியைச் சேர்ந்த கு.முனீஸ்வரி என்ற மாணவி முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளை கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்தார்.

இந்த செய்தி நக்கீரன் இணையத்தில் சிறப்பு செய்தியாக வெளியான நிலையில் கனிமொழி எம்.பி. செய்தியை பார்த்து மாணவிக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர் உள்பட பள்ளி நிர்வாகத்திற்கும் முகநூலில் பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

அதே போல ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் காவல் நிலைய ஆய்விற்காக வந்தவர் மாணவி முனீஸ்வரி மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றச் செயலர் ஆசிரியர் ராஜகுரு ஆகியோரை பாராட்டி பரிசுகளையும் வழங்கினார். இதே போல ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.