/nakkheeran/media/post_attachments/s3fs-public/2018-10-09/FB1.jpg)
கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆசிரியரை விடுதலை செய்யக்கோரியும் திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:
’’தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் சமீப காலமாக கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான போக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளதை கண்டிக்கிறோம். மேலும் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் வார இதழின் உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளருமான நக்கீரன் கோபால் அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து புனே செல்ல இருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது தமிழக ஆளுநரின் பணிகளில் தலையிடுவதாக ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து. மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் செயலை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.
சமூக அவலங்களையும், ஊழல்களையும், அரசும், ஆட்சியாளர்களும் மூடிமறைக்கும் பொழுது அதனை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் மிக உன்னதமான பணியை செய்யும் பத்திரிக்கையாளர்களையும், ஊடகங்களையும் நசுக்கும் நோக்கில், அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, பொய்வழக்குகளில் கைது செய்வது உள்ளிட்ட செயல்கள் தொடருமேயானால், ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்று பொருள்.
தமிழகம் மிக நெருக்கடியான சூழலில் சிக்கித் தவித்தபோதெல்லாம், அவற்றை தான் சார்ந்த ஊடகத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்து வந்தவர் நக்கீரன் கோபால், குறிப்பாக சந்தன மரக்கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அரசுக்கு பேருதவியாக செயல்பட்டவர் இவர். இது மட்டுமல்லாமல் தமிழக ஊடகங்களின் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வழக்குகள் நடத்தி வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றியும் பெற்றவர். இப்படிப்பட்ட ஒருவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் மற்றும் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நடந்தவை நடந்தவையாக நக்கீரன் வார இதழ்களில் பதிவு செய்துவரும் நிலையில், அதற்கு மாற்று கருத்து இருக்குமேயானால் சட்டத்தின் மூலம் எதிர்கொள்ளாமல் நக்கீரன் கோபால் அவர்களை பொய் வழக்கில் கைது செய்வது, நடந்த உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் (All are equal before the eyes of law) என்ற போதிலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட சிலர் சுதந்திரமாக போதுமேடைகளில் தோன்றும் நிலையில் சிலர் மட்டும் ரகசியமாக கைது செய்யப்படுவது சட்டத்தின் ஆட்சி (RULE OF LAW) தான் நடக்கிறதா என்ற ஐயத்தினையும் அச்சத்தினையும் ஏற்படுத்துகிறது.
எனவே தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்குகளையும், கைது நடவடிக்கைகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்றும், நக்கீரன் கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.''
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)