Skip to main content

நக்கீரன் இணைய செய்தி எதிரொலி.. சாதித்த அரசுப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம்

Published on 09/07/2018 | Edited on 09/07/2018
school

 

 "மாணவர்கள் சேர்க்கையில் சாதித்த அரசுப் பள்ளி: ஆசிரியர்கள், வகுப்பறைகள் பற்றாக்குறை! திரும்பிப் பார்ப்பாரா அமைச்சர்?" என்ற தலைப்பில் ஜூலை 3 ந் தேதி நக்கீரன் இணைய தளத்தில் சிறப்பு செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியின் தாக்கம் அந்தப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியரை மாவட்ட கல்வி நிர்வாகம் நியமித்துள்ளது.
   

புதுக்கோட்டை மாவட்டம் அமைச்சர் விஜயபாஸ்கரின்  விராலிமலைத் தொகுதியில் உள்ள அன்னவாசலில் இயங்கும் சமஸ்தான காலத்து தொடக்கப்பள்ளியில் இந்த ஆண்டு முதல் வகுப்பில் மட்டும் 88 மாணவர்களும் இதர வகுப்புகளையும் சேர்த்து 131 மாணவர்களையும் சேர்த்து சாதனை படைத்த அரசுப் பள்ளியில் மொத்தம் 410 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. 

 

இத்தனை மாணவர்களை சேர்த்த பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை பெற்றோர்கள் விழா நடத்தி பாராட்டினார்கள். ஆனால் அந்தப் பள்ளியில் 3 ஆசிரியர்களும் 3 வகுப்பறைகளும் பற்றாக்குறையாக உள்ளனர் என்பதையும் தினசரி அந்த வழியாக செல்லும் அமைச்சர் கவனிக்க வேண்டும் என்பதையும் தான் நக்கீரன் இணையதளத்தில் சிறப்பு செய்தியாக வெளியிட்டிருந்தோம்.


   செய்தி வெளியானதும் மாவட்ட, ஒன்றிய கல்வி அதிகாரிகள் பள்ளியை ஆய்வு  செய்து விரைவில் ஆசிரியர்கள், கூடுதல் வகுப்பறைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தனர்.
  

 இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா உத்தரவின் பேரில் வட்டார கல்வி அலுவலர் பொன்னழகு  கடந்த 5 ந் தேதியே வேறு பள்ளியில் இருந்து இரு இடைநிலை  ஆசிரியர்களை மாற்றுப்  பணியில் செல்ல உத்தரவு பிரப்பித்தார். இன்று 9 ந் தேதி மாற்றுப்பணிக்கு செல்ல இருந்த நிலையில் ஒரு மாற்றுப்பணி ஆசிரியர் பணியாற்றிய பள்ளியில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை வந்ததால் அந்த ஆசிரியர் மாற்றுப் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இலுப்பூர் தொடக்கப்பள்ளியில் இருந்து  இன்னாசி எட்வின் அலெக்ஸ் என்ற ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டும் அன்னவாசல் தொடக்கப்பள்ளிக்கு வந்து மாற்றுப்பணியில் பொருப்பேற்றுக் கொண்டார்.


   ஆசிரியர் பற்றாக்குறையில் ஆசிரியர் கிடைத்திருப்பதால் மாணவர்களும் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் மொத்தம் உள்ள 3 இடங்களுக்கும் நிரந்தர பணியில் ஆசிரியர்களை நியமிப்பதுடன் வகுப்பறைகளும் கிடைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர் பெற்றோர்கள்.
   உடனடி நடவடிக்கை எடுத்த கல்வித்துறையை பாராட்டுவோம்.
    
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.