
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மறுபுறம், பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வ ஸ்டாலின் தனது கூட்டணியை மட்டுமே நம்பியிருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. சொத்து வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 மாதங்களில் மின் கட்டணத் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால், வரவிருக்கும் பா.ஜ.க. ஆட்சியில் அது நிறைவேற்றப்படும்” என்றார்.
இதனிடையே ராமதாஸ் அன்புமணி விவகாரம் குறித்து கேள்விக்கு, “அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே இருப்பது உட்கட்சி பிரச்சனை அதில் நாங்கள் தலையிட முடியாது. ராமதாஸ் - அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்” என்று பதிலளித்தார்.
பாஜக கூட்டணி குறித்து திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “பாஜக - அதிமுக கூட்டணி உடைய வேண்டும் என்று திருமாவளவன் விருப்பப்படுகிறார். ஆனால், நான் அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.