NAI police investigate the youth ! 7 day 'custody'

சேலத்தில், யூடியூப் சேனல்களைப் பார்த்து துப்பாக்கிகளை தயாரித்த வழக்கில் கைதான வாலிபர்களை 7 நாள்கள் காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமைப் பிரிவு (என்.ஐ.ஏ) காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சேலம் மாவட்டம், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் காவல்துறையினர் கடந்த மே 20ம் தேதி, புளியம்பட்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு கைத்துப்பாக்கி, பாதி செய்து முடிக்கப்பட்ட நிலையில் இருந்த பெரிய துப்பாக்கி, ஒரு லிட்டர் பெட்ரோல், லைட்டர் ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

Advertisment

அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், உடனடியாக அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி (24) மற்றும் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. செட்டிச்சாவடி பகுதியில், அவர்கள் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து துப்பாக்கி செய்தவதற்காக இரும்பு உருளைகள், வெல்டிங் இயந்திரம், வாக்கிடாக்கி, அரிவாள், கையுறைகள், முகமூடிகள் மற்றும் லேத் பட்டறையில் பயன்படுத்தப்படும் எல்லா விதமான உபகரணங்களையும் கைப்பற்றினர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சேலம் அழகாபுரம் புதூரைச் சேர்ந்த அவர்களுடைய நண்பன் கபிலன் (25) என்பவரையும் கைது செய்தனர். இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை தடுக்கவும், பறவைகளை பாதுகாக்கவும் ஆயுதம் ஏந்திப் போராட ஒரு தனி இயக்கத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. யூடியூப் சேனல்களைப் பார்த்து துப்பாக்கி செய்ய கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளனர். பிடிபட்ட மூவர் மீதும் ஆயுதத்தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

உள்ளூர் காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு பின்னர் கியூ பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்தப் பிரிவு காவல்துறையினர் அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், புதிய தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், அவர்களின் பின்னணியில் வேறு இயக்கங்களோ, நபர்களோ இல்லை என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், கபிலன் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கு பின்னர் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பிடிபட்டவர்களில் நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகிய இருவரையும் 7 நாள்கள் காவலில் எடுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவர்களிடம் ஆக. 23ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் சென்னையில் வைத்து விசாரித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவர்களை சேலத்திற்கு அழைத்து வந்து, அவர்கள் துப்பாக்கி தயாரிப்பதற்காக எடுத்திருந்த வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். துப்பாக்கிகளை தயாரித்தது எப்படி என்று செய்து காட்டச் சொல்லி, காணொளி காட்சியாக பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். மேலும், பிணையில் விடுதலை ஆன கபிலனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.